கோலாலம்பூர், 08 நவம்பர் (பெர்னாமா) -- 2025-ஆம் ஆண்டில் மலேசியா தலைமையேற்கும் ஆசியான் மாநாட்டில் பெண் தொழில்முனைவோருக்கான கண்காட்சி ஒன்றை நடத்த தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு பரிந்துரைத்துள்ளது.
வியூக ஒத்துழைப்பிற்காக, இதர அமைச்சுகளுக்கு பரிந்துரைப்பதற்கு முன்னதாக, தமது அமைச்சின் அளவில், இவ்விவகாரம் தொடர்பில் விரிவாக விவாதிக்கப்படும் என்று அதன் துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.
''நிறைய பேர் வெளியூறுக்கு செல்கின்றனர். இந்தோனேசியா, சீனா, துபாய் ஆகிய இடங்களுக்குச் செல்கின்றனர். ஆசியானுக்கு நிறைய பேர் வருவார்கள், அவர்கள் வந்தவுடன் கே.எல்.ஐ.ஏ விமான நிலையத்தில் முகப்புகளை அமைத்து இந்த மாதிரி கண்காட்சிகளை நடத்தினால் அது ஒரு வெளிப்பாடாக இருக்கும். இவ்வாறு திட்டமிட்டு ஒரு முடிவு எடுக்க வேண்டும்,'' என்றார் அவர்.
இங்குள்ள தயாரிப்புகள் வெளிநாட்டு பேராளர்களைச் சென்றடைவதற்கான வாய்ப்பாக அமையும் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் தெரிவித்தார்.
இன்று புத்ராஜெயாவில் நடைபெற்று வரும் மலேசிய பெண் தொழில்முனைவோர் கண்காட்சி KUWM-ஐ தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
பெண்கள் தங்களது வணிக ஆற்றலை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் "தேசிய பொருளாதாரத்தை இயக்கும் பெண் தொழில்முனைவோர்கள்" என்றக் கருப்பொருளுடன் இக்கண்காட்சி இன்று தொடங்கி நவம்பர் 10-ஆம் தேதி வரை நடைபெறுவதாக ரமணன் கூறினார்.
''தங்களது பொருட்களை விளம்பரப்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு. இதன் மூலம் தங்களது வியாபரத்தை மேம்படுத்தி வெற்றிக் காண முடியும்,'' என்றார் அவர்.
இக்கண்காட்சியில் பல்வேறு வர்த்தக துறைகளைச் சேர்ந்த 100 முகப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)