பொது

எகிப்துக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளும் பிரதமர்

09/11/2024 04:26 PM

கஹெரா, 09 நவம்பர் (பெர்னாமா) --   இன்று முதல் நான்கு நாட்களுக்கு எகிப்துக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வது, இரு நாடுகளுக்கு இடையிலான சகோதரத்துவ உறவில் முக்கிய வரலாற்றைப் பதிவு செய்யும்.

அதிபர் அப்டெல் ஃபத்தா எல்-சிசியின் அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்படும் இப்பயணம் ஒத்துழைப்பைப் பன்முகப்படுத்தி, வலுப்படுத்துவதோடு, வட்டாரப் பிரச்சனைகளைக் களைவதற்கான அடித்தளமாகவும் அமையும் என்று எகிப்துக்கான மலேசிய தூதர், டத்தோ முஹமட் தரிட் சுஃபியான் தெரிவித்தார்.

உள்ளூர் நேரப்படி இன்று மாலை மணி 6.30-க்கு அல்லது மலேசிய நேரப்படி நள்ளிரவு மணி 12.30-க்கு பிரதமர், கெய்ரோ சென்றடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்தானா அல் இத்திஹாதியாவில் நடைபெறும் அதிகாரப்பூர்வ வரவேற்பு நிகழ்ச்சியில் எல்-சிசி, அன்வாரை வரவேற்பதாக கூறிய முஹமட் தரிட், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை இருவரும் இருதரப்பு சந்திப்பிலும் கலந்து கொள்வர் என்றார்.

வர்த்தகம், முதலீடு, தற்காப்பு, பாதுகாப்பு, சுற்றுலா, கல்வி மற்றும் மத விவகாரங்கள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் அந்த இருவழி சந்திப்பு மேற்கொள்ளப்படும்.

பரஸ்பர நலன் சார்ந்த வட்டார மற்றும் அனைத்துலக பிரச்சனைகள், குறிப்பாக பாலஸ்தீன மோதல்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)