பஞ்சாப், 09 நவம்பர் (பெர்னாமா) -- கனடியப் பிரதமர் ஜஸ்தின் திருடோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியா, பஞ்சாப் மாநிலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்திய அரசாங்கத்தை வழிநடத்தும் பாரதிய ஜனதா கட்சியுடன் தொடர்புடைய தொழிற்சங்கம் ஒன்று இந்த கண்டன ஆப்பாட்டத்தை மேற்கொண்டதாக, ரோட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கண்டன ஆப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிலர் பிரதமரின் உருவ பொம்மையை எரித்தனர்.
இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த திருடோவ் முயற்சிப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
மேலும், அண்மையில் கனடாவில் உள்ள இந்து கோவில் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
கனடாவில் சீக்கிய பிரிவினைவாதி ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில், இந்தியாவுக்கும் கனடாவுக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
அக்கொலையில் இந்திய மத்திய அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சருக்கு தொடர்பு இருப்பதாக கனடிய அமைச்சர் ஒருவர் கூறியதை தொடர்ந்து, இவ்விரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)