லிமா, 13 நவம்பர் (பெர்னாமா) -- வரும் நவம்பர் 14 தொடங்கி 16-ஆம் தேதி வரையில், பெருவில் நடைபெறவிருக்கும் ஆசிய பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பான, APEC- இன் பொருளாதார தலைவர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொள்ள, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் லிமா சென்றடைந்தார்.
பிரதமர் மேற்கொள்ளும் இந்த முதலாவது அதிகாரப்பூர்வ பயணத்திற்காக, அவரை ஏற்றிச் சென்ற விமானம், உள்ளூர் நேரப்படி இரவு மணி 11.15 அளவில் இராணுவ விமானப்படை தளத்தில் தரையிறங்கியது.
பெரு நாட்டின் உற்பத்தித் துறை அமைச்சர் செர்ஜியோ கோன்சாலஸ் குரேரோ, தேசிய நெறிமுறைகள் மற்றும் சடங்குகளுக்கான தலைமை இயக்குநர், தூதர் லூயிஸ் எஸ்கலாண்டே ஷுலர்; விமானப்படைத் தலைவர், ஜெனரல் ஜூலியோ சீசர் குட்டிரெஸ் மற்றும் பெரு விமானப்படை அதிகாரிகள், பிரதமர் அன்வார் இப்ராஹிமை இராணுவ மரியாதையுடன் வரவேற்றனர்.
தமது வருகையின்போது, மலேசியா மற்றும் பெரு நாட்டிற்கு இடையிலான ஒத்துழைப்பை குறித்து பேசுவதற்காக, அந்நாட்டின் அதிபர் டினா எர்சிலியா போலுயார்டே ஜெகர்ராவை பிரதமர் சந்திக்கவிருக்கிறார்.
அதோடு, நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறும், APEC தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கான உச்சநிலை மாநாட்டிலும் பிரதமர் பங்கேற்பார்.
2008 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்றாவது முறையாக APEC மாநாட்டை, லிமா ஏற்று நடத்துகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)