சிறப்புச் செய்தி

இளைஞர்களையும் பாதிக்கும் நீரிழிவு நோய்

14/11/2024 08:23 PM

கோலாலம்பூர், 14 நவம்பர் (பெர்னாமா) -- உலகளவில் 50 கோடிக்கும் மேற்பட்டவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக அனைத்துலக நீரிழிவு கூட்டமைப்பு IDF-இன் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.இதில் முதியவர்கள் மட்டுமல்லாது இளைஞர்களும் அடங்குவர்.

அதிலும், நீரழிவு நோய் கண்டிருப்பது குறித்து பெரும்பாலான இளைஞர்கள் அறிந்திருக்காதது வேதனையளிப்பதாக உட்சுரப்பியல் நிபுணர், இணைப் பேராசிரியர் டாக்டர் ஜெயகந்தா ரத்னசிங்கம் கூறுகிறார்.

நீரிழிவு நோய் முதியவர்களை மட்டும் தாக்கக்கூடிய நோயாக கருதக்கூடாது.

மாறாக, 40 வயதிற்கு குறைவானவர்களும் இந்த நீரிழிவு நோயினால் எளிதில் பாதிக்கப்படுவதாக டாக்டர் ஜெயகந்தா தெரிவித்தார்.

மலேசியாவில் 15 விழுக்காட்டினருக்கு அதாவது அறுவரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

குறிப்பாக, மலாய் மற்றும் சீனர்களைக் காட்டிலும் இந்தியர்கள் இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுவதாக டாக்டர் ஜெயகந்தா குறிப்பிட்டார்.

''நாற்பது வயதிற்கு குறைவான மக்கள் தங்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படாது என்று கருதுகின்றனர். இது ஒரு தவறான கண்ணோட்டம். 2023ஆம் ஆண்டின் தேசிய சுகாதாரம் மற்றும் நோயுற்ற தன்மை கணக்கெடுப்பில் (national health and morbidity survey) 40 வயதிற்கும் குறைவானர்கள் அதிகமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆய்வு மேற்கொள்ளும் வரை 90 விழுக்காடு யாருக்கும் இந்நோய் கண்டிருப்பது தெரியாது,'' என்றார் அவர்.

நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு, உடல் பருமன் முக்கிய காரணமாக அமைந்துவிடுகின்றது.

அளவிற்கு அதிகமான மாவுச் சத்து, கொழுப்புச் சத்து, இனிப்பு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வதாலும், போதுமான உடற்பயிற்சி இல்லாத காரணத்திலும் உடல் பருமன் ஏற்படுகின்றது.

உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியும் என்பதை மக்கள் அறிய வேண்டும் என்று டாக்டர் ஜெயகந்தா விளக்கினார்.

''உடல் பருமன் நிலையை நாம் குறைத்துக் கொண்டால் நீரிழிவு பிர்ச்சனை பெருமளவில் குறைந்துவிடும். அந்நோய்யுடன் சேர்ந்து ஏற்படக் கூடிய இரத்த அழுத்தம், கொழுப்பு சத்து உடபட இதர பிரச்சனைகளும் குறைந்துவிடும். உடல் பருமனை குறைந்தால் நமக்கு நல்லது,'' என்றார் அவர்.

இதனிடையே, நீரிழிவு நோய் ஏற்படாமல் இருப்பதற்கும் அதனை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும் என்று டாக்டர் ஜெயகந்தா அறிவுறுத்தினார்.

உணவுக் கட்டுப்பாடு மட்டுமின்றி சுகாதார பரிசோதனைகளை மேற்கொள்வது, மருத்துவரிடம் ஆலோசனைப் பெறுவது ஆகிவையும் இதில் அடங்கும்.

அதற்கு ஏற்ப இவ்வாண்டின் உலக நீரிழிவு நோய் தினத்தின் கருப்பொருளும் அமைந்திருப்பதாக அவர் விளக்கினார்.

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னதாக, நீரிழிவு நோய்க்கான இன்சுலினை கண்டுப்பிடித்த டாக்டர் ஃபிரடெரிக் பேண்டிங்யை நினைவும் கூறும் வகையில் அவர் பிறந்த தினமான நவம்பர் 14ஆம் தேதியை 'உலக நீரிழிவு நோய் தினமாக' உலக சுகாதார நிறுவனம் 1991ஆம் ஆண்டு முதல் அனுசரித்து வருகின்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)