ஜான்சி, 17 நவம்பர் (பெர்னாமா) -- வட இந்தியாவில் மருத்துவமனை ஒன்றின் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான பிரிவில் தீச்சம்பவம் நிகழ்ந்ததற்கான காரணம் தங்களின் அன்புக்குரியவர்களின் நிலை போன்ற விவரங்கள் கோரி அங்கு பாதிக்கப்பட்டவர்கள் கூடினர்.
இச்சம்பவத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்ததோடு மேலும் 16 குழந்தைகள் காயத்திற்கு ஆளான வேளையில், தீக்கிரையான தங்களின் பிள்ளைகளை அடையாளம் காண முடியாத சூழ்நிலை குறித்து அவர்களின் பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
உத்தர பிரதேச தலைநகர் லக்னோவின் தென்மேற்கு பகுதியில் இருக்கும் ஜான்சி மாவட்டத்தில் உள்ள மகாராணி லக்ஷ்மிபாய் மருத்துவக் கல்லூரியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில், முற்றிலும் தீக்காயங்களுக்கு ஆளான தங்களின் பிள்ளைகளின் உடலைக் காட்டி அடையாளம் காணுமாறு தங்களிடம் கேட்கையில் எவ்வாறு அடையாளம் காண முடியும் என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
"அதிகாரிகள் தீக்காயங்களுடன் குழந்தைகளின் உடலைக் காட்டி, எங்கள் குழந்தைகளை அடையாளம் காணச் சொன்னார்கள். ஆனால் நாங்கள் அதை எப்படிச் செய்ய வேண்டும்? யாராவது எனக்கு புரிய வைப்பார்களா? எரிந்த எனது குழந்தையின் உடலைக் கண்டு எப்படி அடையாளம் காண்பது? அதற்கு வாய்ப்பே இல்லை. எனக்கு என் குழந்தை வேண்டும். அவ்வளவுதான்", என்று அவர் கூறினார்.
"நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டபோது, பல குழந்தைகளைக் காப்பாற்றினேன். ஆனால் என்னுடைய குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. என்னால் இன்னும் என் குழந்தையை அடையாளம் காண முடியவில்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. என் குழந்தையை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. நாங்கள் எங்கே போவது? எங்கள் குழந்தைகளை யாரிடம் திரும்பக் கேட்பது? இங்கே யாரும் கேட்பதில்லை; எனது கேள்விகளுக்கு யாராலும் பதிலளிக்க முடியாது அல்லது எனது குழந்தையை நான் எப்போதாவது கண்டுபிடிக்க முடியுமா என்று கூறவும் முடியாது", என்றார் அவர்.
இச்சம்பவம் நிகழ்ந்ததற்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை.
இதன் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவத்தின்போது அப்பிரிவில் 49 குழந்தைகள் இருந்த வேளையில், அவர்களில் புதிதாக பிறந்த 38 குழந்தைகளை அவசர சேவை பிரிவினர் காப்பாற்றியதாக மாநில துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக் தெரிவித்தார்.
காயமடைந்த குழந்தைகளுக்குச் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் மருத்துவமனையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
தீவிர சிகிச்சை பிரிவில் தீ எச்சரிக்கை அலாரம் பொருத்தப்பட்டிருந்தாலும், சம்பவத்தின்போது அது செயல்படவில்லை என்றும் புகை மற்றும் தீ போன்ற அறிகுறிகளைக் கண்ட பின்னரே மருத்துவமனை ஊழியர்கள் செயல்பட்டதாகவும் பெற்றோர்களும் அங்கிருந்தவர்களும் தெரிவித்துள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)