சிப்பாங், 20 நவம்பர் (பெர்னாமா) -- எகிப்து, சவூதி அரேபியா, பிரேசில், பெரு ஆகிய நான்கு நாடுகளுக்கு, நவம்பர் 9ஆம் தேதி தொடங்கிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் பயணம் நேற்று நிறைவடைந்தது.
பிரதமர் பயணித்த விமானம், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், KLIA-வின் பூங்கா ராயா வளாகத்தை இன்று காலை 11.40 மணிக்கு வந்தடைந்தது.
டத்தோஸ்ரீ அன்வாரையும் பேராளர் குழுவையும் பிரதமரின் மூத்த அரசியல் செயலாளர் டத்தோஸ்ரீ ஷம்சுல் இஸ்கந்தர் எம்டி அகினும் ஆதரவாளர்களும் வரவேற்றனர்.
சம்பந்தப்பட்ட நான்கு நாடுகளுக்கான 11 நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணத்தை, ஒத்துழைப்பை வலுப்படுத்துவதோடு மலேசியாவிற்கு மிகப்பெரிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்க பிரதமர் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
இப்பயணத்தின் போது, பெருவில் நடந்த 31வது ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு, APEC-இன் பொருளாதார தலைவர்கள் வாரம், AELW-விற்கும் பிரேசிலின் G20 உச்சநிலை மாநாட்டிற்கும் மலேசிய பேராளர் குழுவிற்கு அவர் தலைமை ஏற்றார்.
சவூதி அரேபியா ரியாதில் நடைபெற்ற வழக்கத்திற்கு மாறான அரபு மற்றும் இஸ்லாமிய உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்ட அன்வார், ஐக்கிய நாடுகள் அமைப்பு, ஐ.நா-வின் உறுப்பினராக இருப்பதிலிருந்து இஸ்ரேலை இடைநிறுத்த அல்லது நீக்குவதற்கு உலக மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அந்த அதிகாரப்பூர்வப் பயணத்தின் போது,பெரு அரசாங்கத்தின் உயரிய 'ஆர்டர் ஒப் தி சன் ஒப் பெரு' அல்லது 'எல் சோல் டெல் பெரு' அங்கீகாரம் அன்வாருக்கு வழங்கப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)