கோலாலம்பூர், 20 நவம்பர் (பெர்னாமா) -- அண்மையில், விரைவுப் பேருந்து ஒன்றில் மின்சாரம் தாக்கி 18 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவத்திற்கு, முறையான சான்றிதழ் பெறாத தரப்பினர் பொருத்திய மின் கம்பிகளே காரணம்.
விநியோகப் பெட்டியிலிருந்து விசைப் பலகை வரையில், மின் கம்பிகள் தலைகீழாக பொருத்தப்பட்டிருப்பதை சிறப்பு பணிக்குழு கண்டறிந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
பேருந்தில் பயன்படுத்தப்பட்ட மின் சாதனங்களும் பொருட்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட தரத்தை பூர்த்தி செய்யாததை அந்தச் சிறப்புப் பணிக்குழு மேற்கொண்ட பரிசோதனையில் தெரிய வந்ததாக அந்தோணி லோக் விளக்கினார்.
“விநியோக பெட்டியிலிருந்து விசைப் பலகை வரையிலான மின் கம்பிகள் தலைகீழாக பொருத்தப்பட்டுள்ளன. ஆக, மின் கம்பிகள் தவறாக உள்ளன. எனவே, அவர்கள் பொருத்தப்பட்டுள்ளது தவறாக தலைகீழாக உள்ளது. இது விசைப் பலகை வழியாக உயர் மின்னழுத்தத்தை வெளியிடுகிறது. அதனால் தான் பாதிக்கப்பட்டவரின் உடலில் மின்னணு பாய்ந்து மரணத்தை ஏற்படுத்தியுள்ளது, ” என்றார் அவர்.
இன்று, நாடாளுமன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் அவ்வாறு கூறினார்.
சம்பந்தப்பட்ட அதே நிறுவனத்தைச் சேர்ந்த மற்றொரு பேருந்திலும் மின்கம்பி பொருத்தப்பட்டிருப்பதில் கோளாறு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அப்பேருந்தின் செயல்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி பொது போக்குவரத்து நிறுவனம், APAD கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளதாக லோக் தெரிவித்தார்.
இதனிடையே, இச்சம்பவத்தை தொடர்ந்து பொது போக்குவரத்து அமைச்சு புதிய கூடுதல் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிடும் வரை, விரைவுப் பேருந்துகளில் 3-பின் பிளக் மற்றும் USB பயன்பாட்டிற்கு APAD இம்மாதம் 6ஆம் தேதி தடை விதித்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)