உலகம்

விவாகரத்தை அறிவித்தனர் ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு தம்பதியர்

20/11/2024 08:17 PM

புது டெல்லி, 20 நவம்பர் (பெர்னாமா) -- தங்களின் 29 வருட திருமண வாழ்க்கையை முடித்து கொள்வதாக அறிவித்து ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அவரின் மனைவி சாய்ரா பானுவும்.

மேலும், தங்களின் தனியுரிமையை மதிப்பதற்கு தனது ரசிகர்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் நன்றி தெரிவித்திருக்கும் ரஹ்மான், இந்தப் பிரிவினால் ஏற்படும் ''வலி மற்றும் வேதனைகள்'' குறித்தும் தெரிவித்துள்ளனர்.

"இருவரும் ஒன்றாக இணைந்து 30ஆவது ஆண்டில் கால்பதிப்போம் என்று நம்பினோம். ஆனால், அனைத்தும் கண்ணுக்குத் தெரியாத முடிவைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது," என்று ரஹ்மான் தமது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

"தங்களின் உறவில் ஏற்பட்ட மன அழுத்தத்தினால் இம்முடிவை எடுத்துள்ளனர். ஒருவர் மீது ஒருவருக்கு அன்பிருந்தாலும், சிரமமும் மன அழுத்தமும் தங்களால் எதிர்கொள்ள முடியாத அளவிற்கு இடைவெளியை ஏற்படுத்தி உள்ளது. அந்த இடைவெளியை தற்போது எந்தவொரு தரப்பாலும் மீண்டும் நெருக்கமாக்க முடியாது," என்று நேற்று மாலை அவர்களின் வழக்கறிஞர் அறிக்கை ஒன்றின் வழி குறிப்பிட்டுள்ளார்.

இத்தம்பதியருக்கு கதிஜா, ரஹிமா என்ற இரண்டு மகள்களும், அமீன் என்ற ஒரு மகனும் இருக்கின்றனர். 

கதிஜா மற்றும் அமீன் இசை துறையில் பணியாற்றி வருகிறார்கள். 

இந்நிலையில் தனது பெற்றோர் விவாகரத்து முடிவை அறிவித்ததையடுத்து அவர்களின் மகன் அமீன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில்  "இந்நேரத்தில் எங்கள் தனியுரிமையை மதிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். புரிதலுக்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)