பொது

ஊடக சுதந்திரத்திற்கான அனைத்துலக அங்கீகாரத்தை மேம்படுத்தும் அவசியம் உள்ளது

21/11/2024 04:11 PM

கோலாலம்பூர், 21 நவம்பர் (பெர்னாமா) --   நாட்டில் ஊடக சுதந்திரத்திற்கான அனைத்துலக அங்கீகாரத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் இருந்தாலும் 3R எனப்படும் இனம், மதம் மற்றும் அரசக் குடும்பம் தொடர்பிலான விவகாரங்களை உட்படுத்திய வரம்புகள் உள்ளன.

அவ்விவகாரத்தை அரசாங்கம் இன்னும் கடுமையாகக் கையாள்வதோடு, அது வெளிப்படையாக பேசப்படுவதையும் தவிர்க்க வேண்டும் என்று மலாய் ஆட்சியாளர்கள் கேட்டுக் கொண்டதாகவும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

"மக்கள் பேசுவதற்கு நாங்கள் அனுமதி அளிக்கிறோம். ஆனால் மலாய் ஆட்சியாளர்கள் கூட்டத்தில் அது மிகவும் கண்டிப்பானதாகக் கருதப்படுகிறது. எனவே, ஆட்சியாளர்களின் கருத்துக்கு நாமும் கட்டுப்பட்டுள்ளோம். பொதுவெளியில் பேசப்படும் விமர்சனத்தையும் நடவடிக்கையின்றி அனுமதிக்க அவர்கள் விரும்பவில்லை. என் மீது விமர்சனம் எழுந்தால் எவ்வித நடவடிக்கையும் இருக்காது. ஆனால், அதுவே போலீஸ் புகாராக இருந்தால் அவர்கள் பார்த்து கொள்ளட்டும்", என்று அவர் கூறினார்.

கடந்தாண்டு உலக ஊடக சுதந்திரக் குறியீட்டில் 73-ஆவது இடத்தில் இருந்த மலேசியா, இவ்வாண்டு 107-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது குறித்தும் நாட்டின் நிலைப்பாடு பற்றியும் இன்று மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அன்வார் அவ்வாறு பதிலளித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)