பொது

சாரம்சத்திற்கு ஏற்ப சமூக மேம்பாட்டிற்கு ஆசியான் முன்னுரிமை அளிக்க வேண்டும்

21/11/2024 04:16 PM

ஜாலான் கொன்லே, 21 நவம்பர் (பெர்னாமா) --   பொதுப் போக்குவரத்தை சீரமைத்தல், சாலைப் பாதுகாப்பை அதிகரித்தல் மற்றும் மக்களை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு ஆசியான் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

வட்டாரத்தின் வளர்ச்சி, பொருளாதார புள்ளி விவரங்களில் மட்டுமே கவனம் செலுத்தக்கூடாது.

மாறாக, ஆசியான் சமூகம் எண்ணியிருக்கும் சாரம்சத்திற்கு ஏற்ப சமூக மேம்பாட்டிற்கும் தகுந்த முக்கியத்துவத்தைக் கொடுக்க வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

"பொருளாதார வளர்ச்சிக்கான கொள்கைகளை மேற்கொள்வதோடு, அவை எவ்வாறு தினசரி மக்களின் வாழ்க்கையோடு தொடர்புடையது என்பதையும் அறிய வேண்டும்? நாம் பெற்றோர்கள் வேலைக்கு செல்லுவதை எளிதாக்குகிறோமா? மாணவர்கள் பள்ளிக்குச் செல்லுவதை எளிதாக்குகிறோமா? மற்றும் சரக்குகளை எல்லைகளின் வழியே நகர்த்துவதில் எளிதாக்குகிறோமா?", என்று அவர் கூறினார்.

இன்று, கோலாலம்பூரில் நடைபெற்ற 30-ஆவது ஆசியான் போக்குவரத்து அமைச்சர்கள் கூட்டத்தின் தொடக்க விழாவில் வரவேற்புரையாற்றிய லோக் அவ்வாறு தெரிவித்தார்.

போக்குவரத்து துறையில் பசுமையில்ல வளிம வெளியேற்றத்தை எவ்வாறு குறைப்பது, செயற்கை நுண்ணறிவு, ஏஐ மற்றும் IoT எனப்படும் வன்பொருள் கருவிகள் இணையத்துடன் இணைக்கப்படும் திறனைப் பயன்படுத்துதல் போன்ற நோக்கங்களை உட்படுத்திய தீர்வுகளுக்கு முற்றிலும் மாற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)