பண்டார் பெர்மாய்சூரி, 25 நவம்பர் (பெர்னாமா) -- கோலா திரெங்கானு - கோத்தா பாரு கூட்டரசு சாலையின் 53-வது கிலோமீட்டரில் உள்ள கம்போங் சுங்கை லெரெக்கில் Perodua Axiata ரக காரையும் நான்கு சக்கர வாகனம் ஒன்றையும் உட்படுத்திய சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த நிலையில், ஒருவர் படுகாயத்திற்கு ஆளாகினார்.
இன்று அதிகாலை மணி 4.50-க்கு ஏற்பட்ட இச்சாலை விபத்தில் 55 வயதுடைய கமாரூடின் இப்ராஹிம், 54 வயதுடைய அவரின் மனைவி மைமுனா மாட் இசா மற்றும் Perodua Axiata ரக காரை செலுத்திய அத்தம்பதியின் மகளான 30 வயதுடைய நூர் அர்டியானா ஆகியோர் மரணமடைந்தனர்.
மைமுனா மற்றும் நூர் அர்டியானா சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், கமாரூடின் சிகிச்சை பலனின்றி செத்தியு மருத்துவமனையில் மரணமடைந்ததாக அம்மாவட்ட போலீஸ் தலைவர் Supt முஹமட் சைன் மாட் டிரிஸ் தெரிவித்தார்.
பின்னிருக்கையின் இடது புறத்தில் அமர்ந்திருந்த அத்தம்பதியின் மற்றொரு மகளான 21 வயதுடைய நூர் அஷ்வா ஷமிமி கமாரூடின் பலத்த காயங்களுக்கு ஆளானார்.
அதோடு, Toyota Hilux ரக வாகனத்தின் ஓட்டுநரும் பயணியும் சொற்ப காயங்களுக்கு ஆளாகினர்.
கோத்தா பாருவிலிருந்து கோலா திரெங்கானுவிற்குப் பயணித்த Toyota Hilux வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, எதிர் திசையில் நுழைந்து Perodua Axiata காரை மோதியது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவ்விபத்து குறித்து, 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் செக்ஷன் 41 உட்பிரிவு 1-இன் கீழ் விசாரணையை மேற்கொள்வதற்கு 24 வயதுடைய காய்கறி வியாபாரியான Toyota Hilux-இன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)