இஸ்லாமாபாத், 25 நவம்பர் (பெர்னாமா) -- பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் கைத்தொலைபேசி மற்றும் இணைய சேவையை பாகிஸ்தான் ஞாயிற்றுக்கிழமை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
சிறைத் தண்டனையை எதிர்நோக்கி வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் போராட்டத்திற்கு தயாராகி வருவதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசாங்கமும் உள்துறை அமைச்சும் இந்த அறிவிப்பை சமூக வலைத்தளமான X-இல் வெளியிட்டன.
அதில், தடை விதிக்கப்படும் பகுதிகளும், எவ்வளவு காலத்திற்கு இந்த தற்காலிக நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்ற விவரங்கள் குறிப்பிடப்படவில்லை.
அந்நாட்டின் இதர பகுதிகளில் இணைய மற்றும் கைத்தொலைபேசி சேவைகள் வழக்கம்போல் இயங்கும் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மக்களின் உரிமைகள் திரும்பக் கிடைக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரப்படும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.
தமக்கு எதிரான 150க்கும் மேற்பட்ட வழக்குகளால் இம்ரான் கான் ஓராண்டிற்கும் மேலாக சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார்.
எனினும், இன்னும் பிரபலமாகவே இருந்து வருவதோடு, அவரின் அரசியல் கட்சியான பாகிஸ்தான் தெரிக் இ இன்சாஃப், PTI, அவர்மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டவை என்று கூறுகிறது.
இந்நிலையில், இம்ரான் கானின் ஆதரவாளர்கள் அவரை விடுதலை செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
மற்றொரு நிலவரத்தில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறையில் இருந்து விடுவிக்க, தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடத்தப்பட்ட போராட்டத்தில், ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களைப் பாகிஸ்தான் போலீஸ் கைது செய்துள்ளதாக, பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தினார்.
போலீஸ் கைது செய்த 4,000க்கும் மேற்பட்ட இம்ரான் கான் ஆதரவாளர்களில், ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர் என்று கிழக்கு பஞ்சாப் மாகாணத்தின் பாதுகாப்பு அதிகாரி சாஹிட் நவாஸ் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தினால், நகரத்தை இணைக்கும் முக்கிய சாலைகளும் நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)