சிங்கப்பூர், 27 நவம்பர் (பெர்னாமா) -- சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலக செஸ் வெற்றியாளர் தொடரில், நடப்பு வெற்றியாளரான சீனாவின் டிங் லிரனுக்கு எதிராக இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ் விளையாடி வருகிறார்.
அதில், நேற்று மூன்று மணி நேரம் நீடித்த இரண்டாம் சுற்று ஆட்டம் இருவருக்கும் சமநிலையில் முடிந்துள்ளது.
14 சுற்றுகளை கொண்ட இப்போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தை டிங் லிரன் வென்ற வேளையில் இரண்டாவது சுற்று ஆட்டம் சமநிலையாக முடிந்திருக்கிறது.
இதில் குகேஷ் கருப்பு காய்களோடும், டிங் லிரன் வெள்ளை காய்களோடும் விளையாடினர்.
பின்னர் இந்த ஆட்டம் 23-வது நகர்த்தலின் போது சமநிலையில் முடிவடைந்தது.
இந்த முடிவு குறித்து பேசியிருக்கும் 18 வயது குகேஷ் “கருப்புக் காய்களைக் கொண்டு உலக வெற்றியாளர் போட்டியில் சமன் செய்வது எப்போதும் இனிமையானது தான். இது வெறும் ஆரம்பம் தான், எனக்கு இன்னும் நிறைய ஆட்டங்கள் மீதமுள்ளன” என்று கூறியுள்ளார்.
இரண்டு சுற்றுகளின் முடிவில் டிங் லிரன் 1.5 புள்ளிகளையும் குகேஷ் 0.5 புள்ளிகளையும் பெற்றுள்ள வேளையில், இப்போட்டி நாளையும் தொடர்கிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)