பட்னா, 27 நவம்பர் (பெர்னாமா) --2025 இந்தியப் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி, ஐ.பி.எல்.-லில் நிச்சயம் களமிறங்குவார் என்ற நம்பிக்கையில் ஏலத்தில் 13 வயதுடைய வைபவ் சூர்யநாசியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியுள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர், ஐ.பி.எல். வரலாற்றில் குறைந்த வயதில் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்தார்.
அடுத்தாண்டு மார்ச் மாதம் தொடங்கும் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கும் ஆட்டக்காரர்களை வாங்கும் ஏலம் சவூதி அரேபியா, ஜெட்டாவில் இரு நாட்கள் நடத்தப்பட்டது.
அதில், வைபவ் சூர்யநாசியை வாங்குவதற்கு முன்னதாக 30 லட்சம் ரூபாய் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டது.
அவரை வாங்க ராஜஸ்தான், டெல்லி அணிகளுக்கு இடையே போட்டியும் நிலவியது.
இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை 110 கோடி ரூபாய் செலவில் தன்வசப்படுத்தியது.
இவ்வாண்டு ஜனவரி மாதம், ரஞ்சி கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் முதன்முறையாக விளையாடிய வைபவ் சூர்யநாசி, கடந்த செப்டம்பர் மாதம் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தேசிய விளையட்டாளர் குழுவில் களம் கண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)