பொது

''டத்தோ'' பட்டம் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி

28/11/2024 07:47 PM

பெட்டாலிங் ஜெயா, 28 நவம்பர் (பெர்னாமா) -- மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ''DATO'' பட்டம் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்த குற்றச்சாட்டுத் தொடர்பாக, ஆடவர் ஒருவர் இன்று பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

இருப்பினும் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை கூ கேக் சிங் எனும் அந்த ஆடவர் மறுத்து விசாரணை கோரினார்.

டத்தோ பட்ட பெற்றுத் தருவதாகக் கூறி, தெ யுன் ஹோக் எனும் நபரிடம் இருந்து, ஒரு லட்சம் ரிங்கிட் பெற்றதாக கூ கேக் சிங் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அக்டோபர் முதலாம் தேதி தொடங்கி டிசம்பர் 28-ஆம் தேதி வரை, பெட்டாலிங் ஜெயா, கோத்தா டாமான்சாராவில் உள்ள கடை ஒன்றில் கூ கேக் சிங் இச்செயலைப் புரிந்ததாகக் குற்றம் பதிவாகியுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்த பட்சம் ஓர் ஆண்டு மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேல் போகாத சிறையுடன் பிரம்படி விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 420-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.

5,000 ரிங்கிட் ஜாமின் தொகை மற்றும் தனி நபர் உத்தரவாதத்தின் பேரில் கூ கேக் சிங்கை ஜாமினில் விடுவிக்க, மாஜிஸ்திரேட் ஷாரில் அனுவார் அஹ்மாட் முஸ்தாபா அனுமதி அளித்தார்.

இவ்வழக்கின் மறு செவிமடுப்பு ஜனவரி 9-ஆம் தேதி நடைபெறும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)