கோலாலம்பூர், 28 நவம்பர் (பெர்னாமா) -- ஒன்பது மணிநேர பணி செய்யும் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் நேர நிர்வகிப்பு சவால்களையும் பகுதிநேர சிறுதொழிலில் ஈடுபடுபவர்களும் எதிர்கொண்டுதான் வருகின்றனர்.
விளம்பரம், கணக்கெடுப்பு, ஊதிய நிர்வகிப்பு, காலத்திற்கு ஏற்ற பரிணாமம், குடும்பம், குழந்தைகள் என தாங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் சற்று அதிகம் என்று கூறுகின்றனர் பகுதிநேர சிறுதொழிலில் ஈடுபட்டு வரும் பெண்கள் சிலர்.
முழுநேர பணியில் ஈடுபடாமல் பகுதிநேர தொழிலில் ஈடுபட்டால் குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் அதிக நேரத்தை செலவிட முடியும் என்றே சில பெண்கள் அதனைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
எனினும், அதன் நிர்வாகம் என்பது எளிமையானதல்ல என்று கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக Big Junkies எனும் பெயரில் சிறுவர்கள் விரும்பும் திண்பண்டங்கள் தயாரித்து விற்கும் லொவிஷீனா இராமையா கூறினார்.
''வீடு, பிள்ளைகள், தொழில் என அனைத்தையும் முறையாக நிர்வகிப்பது மனப்போராட்டத்தை ஏற்படுத்தும். எதற்கு முக்கியத்துவம் அளிப்பது என்பதே மிகப் பெரிய சவால். அதனை முறையாக நிர்வகிக்க வேண்டும்,'' என்றார் அவர்.
அதேநேரத்தில், தமது சிறுதொழிலில் வியாபாரத்தை விரிவுப்படுத்தும் அம்சங்களில் கவனம் செலுத்துவதும் ஒரு முக்கியப் பணியாக இருப்பதால் அதனை புத்தாக்க சிந்தனைகளோடு செய்வதும் லொவிஷீனாவுக்கு சவாலாகிறது.
இதனிடையே, திருமண வைபவங்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் என சுபகாரியங்களில் கலந்துகொள்ளும் விருந்தினர்களுக்கு வழங்கப்படும் door gift எனப்படும் பரிசுகளை Greeny Gift எனும் பெயரில் அழகிய சிறு வடிவிலான செடிகளாக விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார் இரு குழந்தைகளுக்கு தாயாரான சுகாஷினி நாகேஸ்வர ராவ்.
போட்டித்தன்மைமிக்க இத்தொழிலில் தமது வாடிக்கையாளர்களிடம் உடனுக்குடன் பதிலளிப்பதே சவால் நிறைந்தது என்று சுகாஷினி தெரிவித்தார்.
இதனால், சில வாடிக்கையாளர்களை இழக்க நேரிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
''என் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் பணி எனக்கு மிகப் பெரியது. அதனால், சில சமயங்களில் வாடிக்கையாளர்கள் அனுப்பும் கேள்விகளுக்கு என்னால் உடனடியாக பதிலளிக்க முடியாது. அதனால், வாடிக்கையாளர்களை நான் இழந்துள்ளேன்,'' என்றார் அவர்.
பகுதிநேரமாக சிறுதொழில் நடத்தும் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் சிக்கல்கள் தொடர்பில் தங்களின் அனுபவங்களை அவர்கள் இன்றைய வணிக உலகம் அங்கத்தில் பகிர்ந்து கொண்டனர்.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]