பெட்டாலிங் ஜெயா, 02 டிசம்பர் (பெர்னாமா) -- வலது கை அளிக்கும் தானத்தை இடது கை அறியக்கூடாது என்பதை தமது வாழ்நாள் கொள்கையாக கொண்டு வாழ்ந்து மறைந்தார் டான் ஶ்ரீ ஆனந்த கிருஷ்ணன்.
இதுவே, அவர் உடனான நட்பில் தாம் அறிந்த மதிக்கத்தக்க பண்பு என்கிறார் ஆனந்த கிருஷ்ணனின் சுமார் 70 ஆண்டுகால நண்பர் டத்தோ அ.வைத்திலிங்கம்.
எட்டு வயது சிறுவனாக தமக்கு அறிமுகமான ஆனந்த கிருஷ்ணன், கோடிஸ்வரர் அந்தஸ்தை அடைந்தும் குணம் மாறாமல் நட்பு பாராட்டிய அந்திமகால நினைவுகளை பெர்னாமா செய்திகளுடன் பகிர்ந்து கொண்டார் டத்தோ வைத்திலிங்கம்.
சிங்கப்பூரில் பிறந்து ஜப்பானியர்கள் காலணித்துவ ஆட்சியின்போது நெகிரி செம்பிலான், சிரம்பானுக்கு மாற்றலாகிய தாம் 1946ஆம் ஆண்டில் கோலாலம்பூர், பிரிக்ஃபீல்ட்சிலில் வசிக்கத் தொடங்கிய போதுதான் டான் ஶ்ரீ ஆனந்த கிருஷ்ணனைச் சந்தித்ததாக டத்தோ வைத்திலிங்கம் கூறினார்.
''அப்போது அவருக்கு எட்டு வயது. எனக்கு 12 வயது. எங்களின் பெற்றோர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது நாங்கள் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையாடிக் கொண்டிருப்போம்,'' என்றார் அவர்.
சிறுவர்களாக தொடங்கிய தங்களின் நட்பு, பின்னர் நான்காம் படிவத்தில் ஒரே வகுப்பில் இணையும்போது மீண்டும் தொடர்ந்ததாக அவர் தெரிவித்தார்.
''அக்காலக்கட்டத்தில் நாங்கள் எட்டாம் வகுப்பு என்று சொல்வோம். இப்போது படிவம் நான்கு என்று சொல்கிறார்கள். விக்டோரியா கல்விக் கழகத்தில் வந்து இணைந்தார். நானும் அவரும் ஒரே வகுப்பில் பயின்றோம்,'' என்றார் அவர்
இப்படியாக தொடர்ந்த அவர்களின் நட்பு, கல்வி, தொழில், சமூதாயம், குடும்பம் என இருவேறு திசைகளில் சுமார் 30 ஆண்டுகள் இடைவேளையைச் சந்திக்க நேரிட்டது.
2000ஆம் ஆண்டு ஐ.நா-வின் சமய அடிப்படையிலான மாநாடு ஒன்றில் கலந்துகொள்ள தாம் தேர்வுப் பெற்றபோதுதான், ஆனந்த கிருஷ்ணன் அளித்த நிதியுதவியின் வழி, தங்களின் நட்பும் மீண்டும் மலரத் தொடங்கியதாக, MCCBCHST எனப்படும் பௌத்தம், கிறிஸ்துவம், இந்து மதம், சீக்கியம் மற்றும் தாவோயிசத்திற்கான மலேசிய ஆலோசனை மன்றத்தின் முன்னாள் தலைவரான டத்தோ வைத்திலிங்கம் கூறினார்.
''ஆனால் அது ஐ.நா-வின் ஏற்பாடு என்பதால் அங்கு செல்லும் செலவு மிகவும் அதிகமாக இருந்தது. 16,000 ரிங்கிட்டிற்கும் அதிகமாக இருந்ததால் என்னால் பணம் செலுத்த இயலவில்லை. அப்போதுதான், அடிக்கடி கோவிலில் நான் சந்திக்கும் அவர் தாயாருக்கும் இது குறித்து தெரிய வந்தது. இது தொடர்பில் அவரது மகன் ஆனந்த கிருஷ்ணனிடம் அத்தாயார் தெரிவித்து, அதன் மூலம் எனக்கு உதவி கிடைத்ததோடு அவரின் நட்பும் மீண்டும் மலர்ந்தது,'' என்றார் அவர்.
பின்னர், பல அமைப்புகள் குறிப்பாக தாம் தலைவராக இருந்த மலேசிய இந்து சங்கம், மற்றும் மலேசிய சமூக கல்வி அறக்கட்டளை போன்றவற்றுக்கு அதிகமான நிதியுதவி அளித்த ஆனந்த கிருஷ்ணன், அதனை ஒருபோதும் வெளியில் சொல்லக்கூடாது என்ற நிபந்தனையையும் உடன் இணைப்பார் என நெகிழ்ந்தார் வைத்திலிங்கம்
மலேசிய இந்திய சமுதாயத்தின் பெருமைமிகு அடையாளமாகி, தன்னடக்கத்தோடு வாழ்ந்து, கடந்த நவம்பர் 28ஆம் தேதி மறைந்த ஆனந்த கிருஷ்ணன் உடனான நினைவலைகள் குறித்து, வைத்திலிங்கம் இல்லத்தில் மேற்கொண்ட சந்திப்பில் அவர் அதனைக் கூறினார்
ஆனந்த கிருஷ்ணனின் நல்லுடலுக்கு, நாளை பிற்பகல் மணி இரண்டு தொடங்கி இரவு மணி எட்டு வரை, பிரிக்ஃபீல்ட்சிலில் உள்ள அன்னாரின் இல்லத்தில் பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தலாம் .
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]