கெடா, 03 டிசம்பர் (பெர்னாமா) -- ஜித்ராவில் உள்ள தாமான் தாபுங் ஹஜி மற்றும் கப்பாளா பாத்தாஸ் ஆகிய இடங்களில் வெள்ளம் வடிந்ததால், பாதிக்கப்பட்டவர்கள் இன்று தங்களின் வீடுகளில் துப்புரவு பணிகளைத் தொடங்கினர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள், சேதமடைந்த பொருட்களை வீடுகளிலிருந்து வெளியேற்றுவது உட்பட சகதிகளை சுத்தம் செய்யும் பணிகளிலும் ஈடுபட்டிருப்பது பெர்னாமா தொலைக்காட்சி மேற்கொண்ட கண்ணோட்டத்தில் காண முடிந்தது.
இன்று காலை தொடங்கி, தமது கணவர் கூ ஷரிமான் கூ ஹஷிமுடன் இணைந்து வீட்டுகளைச் சுத்தம் செய்யத் தொடங்கியதாகவும், வயது மூப்பின் காரணத்தினால் அதிக வேலைகளை செய்ய இயலவில்லை என்று அங்கு வசிக்கும் ருக்கியா மஹ்முட் கூறினார்.
''தன்னார்வலர்கள் வந்து எங்களுக்கு உதவுவார்கள் என்று நம்புகிறேன். ஏனெனில், நாங்கள் வயதானவர்கள், எனக்கு வயது 69. என் கணவருக்கும் உதவி கிடைக்கும் என்று நம்புகிறேன். பிள்ளைகள் வருவார்கள் ஆனால் தூரமாக இருக்கின்றனர்,'' என்றார் அவர்.
கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட வெள்ளத்தினால் வீட்டு உபயோகப் பொருட்கள் பல சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.
இருப்பினும், வெள்ளத்தினால் ஏற்பட்ட இழப்பின் மதிப்பு தமக்கு தெரியவில்லை என்றும் ருக்கியா கூறினார்.
மேலும், இம்முறை ஏற்பட்ட வெள்ளத்தில் வீட்டில் இருந்த பல்வேறு பொருட்கள் சேதம் அடைந்துள்ள நிலையில், சுமார் 20 ஆயிரம் ரிங்கிட் வரை தமக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக, முஹமட் அஸ்வட் அசிசான் வருத்தம் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)