கோலாலம்பூர், 10 டிசம்பர் (பெர்னாமா) -- உள்நாட்டில் குறிப்பாக, பகாங், கேமரன் மலை மற்றும் பேராக் போன்ற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காய்கறிகளின் விலைகள் மழைக்காலத்தில் சற்று அதிகரித்திருப்பதாக வியாபாரிகள் சிலர் குறைப்பட்டுக்கொண்டனர்.
தற்போது தக்காளியை தவிர்த்து புடலங்காய், சுரைக்காய், கத்திரிக்காய் உட்பட பல காய்கறிகளின் விலை அதிகரித்திருக்கின்றது.
அதன் விலை அதிகரித்திருப்பதால் வியாபாரம் சற்று பாதிக்கப்படுவதாக கூறும் அவர்கள், மழைகாலமாக இருப்பதால் விவசாயிகளின் நிலைமையும் தங்களால் புரிந்துக் கொள்ள முடிவதாக கூறினர்.
''இறக்குமதி செய்யும் காய்கறிகளின் விலைதான் சற்று அதிகமாக உள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் வியாபாரத்திற்காக வாங்கும் காய்கறிகளின் எண்ணிக்கையை குறைத்துவிட்டோம். சில காய்கறிகளை வாங்கி விற்க முயற்சித்தாலும் விலை அதிகரிப்பால் மக்கள் வாங்க மறுப்பார்கள்,'' என்று அவர்கள் கூறினர்.
செந்தூல் சந்தையின் இன்றைய காலை நிலவரப்படி, மழைத் தூரலிலும் மக்கள் காய்கறிகளை வாங்குவதற்கு சந்தைக்கு வருவதைக் காண முடிந்தது.
இந்த மழைக் காலத்தில், காய்கறி வியாபாரிகள் அவற்றின் விலையை அதிகரிப்பதற்கான நியாயமான காரணத்தை தங்களால் உணர்ந்துக் கொள்ள முடிவதாக அவர்களில் சிலர் கூறினர்.
எனினும், இந்த விலை ஏற்றம் பி40 பிரிவினருக்கு சிரமத்தை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
''காய்கறி விலை அதிகமாகதான் உள்ளது. அதற்கு இந்த மழைக்காலம்தான் காரணம். வியாபாரிகளின் நிலையும் எங்களுக்கு புரிகிறது. எனினும், நாங்கள் காய்கறிகளை வாங்க வேண்டிய கட்டாயம் உள்ளது,'' என்று அவர்கள் கூறினர்.
பருவ மழை காலம் காரணமாக டிசம்பர் இறுதி வரை காய்கறிகளின் விலை 50 விழுக்காட்டிற்கும் கூடுதலாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, கேமரன் மலையின் காய்கறி தோட்டக்காரர்கள் சங்கத்தின் தலைவர் டத்தோ சாய் கொக் லிம் முன்னதாக கூறியிருந்தார்.
மற்றொரு நிலவரத்தில், காய்கறி பயிரிடங்களின் பிரதான தளமான கேமரன்மலை நிலவரங்களையும் பெர்னாமா செய்திகள் கேட்டறிந்தது.
பொதுவாக, அங்கு ஒரு மாதத்தில் அறுவடை செய்ய வேண்டிய காய்கறிகள் அல்லது பயிர்கள், இந்த மழைக்காலத்தில் காலம் தாழ்த்தி தாமதமாக அறுவடை செய்யும் கட்டாயம் ஏற்படுகின்றது.
அந்தச் சமயத்தில் விநியோகம் குறையும் போதே காய்கறிகளின் விலை கணிசமாக உயரும் என்று கேமரன் மலையைச் சேர்ந்த காய்கறி தோட்டக்காரர் பிரேம் குமார் பழனிவேலு தெளிவுப்படுத்தினார்.
''ஒரு மாதத்திற்கு முன்னதாக, கடுகு கீரைகளின் விலை இரண்டு ரிங்கிட், இரண்டு ரிங்கிட் 50 சென்னுக்கு என்று விற்கப்பட்டன. இப்போது ஆறு ரிங்கிட், ஏழு ரிங்கிட்டிற்கு விற்கப்படும். சில சமயங்களில் காய்கறிகளின் விலை அதிகமாக இருந்தால் இறக்குமதி செய்யப்படும். ஆனால், ஆசியா முழுவதும் பருவமழைக் காலம். இந்தக் காலக்கட்டத்தில் இறக்குமதி செய்வதும் கடினம்,'' என்றார் அவர்.
ஒவ்வோர் ஆண்டும் இச்சூழ்நிலை ஏற்படும் என்று கூறிய அவர், விவசாயிகள், மக்கள், வியாபாரிகள் என்று அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.
''அதே வேளையில், விவசாயிகளுக்கும் லாபம் உள்ளது என்று கூற முடியாது. ஏனென்றால், ஒரு டன் எடுத்த இடத்தில் 400 கிலோ வரைதான் காய்கறிகளை எடுக்கிறோம். அதிலும் 60 விழுக்காடு குறைகிறது. இந்தக் காலக்கட்டத்தில் தக்காளி விலை குறைந்துவிட்டது. வழக்கமாக ஆண்டு இறுதியில் தக்காளி விலை ஒரு நல்ல விலையில் இருக்கும். நேற்று அல்லது நேற்று முன்தினம் தக்காளி விலை குறைந்துள்ளது,'' என்றார் அவர்.
இதனிடையே, இந்த விலை ஏற்றத்திற்கு பருவமழை காலம் முதன்மை காரணம் என்று கூறிய பிரேம் குமார், சில காய்கறிகள் இன்னும் குறைந்த விலையில் விற்கபடுவதாக கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)