பொது

அதிகரிக்கும் மனித உரிமை மீறல்கள் - சுவாராம் கவலை

10/12/2024 07:56 PM

கோலாலம்பூர், 10 டிசம்பர் (பெர்னாமா) - அனைவரும் சமமானவர்கள், அனைவருக்குமான உரிமையும் இங்கு சமமாகவே இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தாலும் அது இன்னும் அனைவருக்கும் சாத்தியமற்ற நிலையில் உள்ளது.

நாட்டில் நிகழ்ந்து வரும் மனித உரிமை மீறல் சம்பவங்களின் அதிகரிப்பு அக்கூற்றை நிரூபிப்பதாக கூறுகிறார் மனித உரிமை ஆணையம், சுவாராமின் தலைமை நிர்வாக அதிகாரி சிவன் துரைசாமி.

வேறுபாடுகளின்றி மனிதர்களை மனிதத் தன்மையோடு நேசிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், நாட்டில் உள்ள மனிதநேய பொது அமைப்புகள், தன்னார்வ முறையில் அதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வாண்டு தொடக்கத்தில் பதிவான தடுப்புக் காவல் மரணங்கள் மற்றும் தடுப்புக் காவல் சித்திரவதை ஆகியவை மோசமான மனித உரிமை மீறலாக கருதப்படுகிறது.

அதுமட்டுமின்றி, இவ்வாண்டில் சொஸ்மா எனப்படும் பாதுகாப்பு குற்றங்களுக்கான சிறப்பு நடவடிக்கையின் கீழும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அதில் பலர் இன்னும் விடுவிக்கப்படாமல் சிறைவாசம் அனுபவித்து வருவதையும் சிவன் கோடிகாட்டினார்.

"இவற்றை எதிர்த்து நாம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். அதேவேளையில் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் வகையில் 2004ஆம் ஆண்டில் சில சட்டங்களைக் கொண்டு வருவற்கு அரசாங்கம் முயற்சி செய்தது. அதற்கு மறுப்பு தெரிவிப்பது மட்டுமின்றி மாற்று வழிகள் மற்றும் மாற்று சிந்தனைகளை நாங்கள் அரசாங்கத்திடம் பரிந்துரைத்துள்ளோம்," என்று அவர் கூறினார்.

கடந்த காலங்களைக் காட்டிலும் மக்கள் நலன், உரிமை மற்றும் பேச்சு சுதந்திரம் ஆகியவற்றுக்கு தொடர்ந்து குரல் எழுப்பி வருதுடன் மனித உரிமைக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆட்சேபம் தெரிவிப்பதிலும் சுவாராம் தனது நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

"வரப்போகும் 2025ஆம் ஆண்டில் சுவாராம் மனித உரிமைக்காக குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக அடிப்படையிலான கல்வியை அவர்களுக்கு அதிகளவில் வழங்க முனைகிறோம். அத்தகைய கல்வியினை அவர்கள் பெற்றால் மட்டுமே மனித உரிமைப் பற்றி இன்னும் கூடுதல் தெளிவை அவர்களால் அடைய முடியும். அவர்களும் பின்னர் அதற்கு குரல் கொடுக்கத் தொடங்குவர்," என்று அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, மனித உரிமைகளுக்காக போராடும் தரப்பினரை பிரதமர் தலைமையிலான மடானி அரசாங்கம் முழுமையாக ஆதரித்து அங்கீகரிக்க வேண்டும் என்ற இலக்கையும் அடுத்த ஆண்டு கொள்கை வரைவில் சுவாராம் கொண்டுள்ளதாக சிவன் துரைசாமி தெரிவித்தார்.

இன்று அனுசரிக்கப்படும் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பெர்னாமா செய்திகள் தொடர்புகொண்டபோது அவர் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)