பிரிக்ஃபீல்ட்ஸ், 13 டிசம்பர் (பெர்னாமா) -- கர்நாடக இசையில் மிளிரும் கலைஞர்கள் மட்டுமின்றி, அக்கலையைக் கற்று வரும் இளம் தலைமுறையினருக்கும் வாய்ப்பளித்து அனைத்துலக அரங்கில் அவர்களின் பெயரை பதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நேற்று ஆறாவது முறையாக மலேசிய அனைத்துலக கர்நாடக இசை விழா, MyICMF 2024 தொடக்கம் கண்டது.
சுகம் அறவாரியம் ஏற்று நடத்தும் இவ்விழாவில், பங்கேற்க வேண்டும் என்ற அனைத்துலக கர்நாடக இசை கலைஞர்களின் நாட்டம் மலேசியாவும் இத்துறையில் அபரிமித வளர்ச்சி கண்டிருப்பதை குறிப்பதாக அதன் இயக்குநர் சுஜித்ரா ஜெயசீலன் கூறுகின்றார்.
அனைத்துலக கலைஞர்கள் மற்றும் உள்ளூர் கலைஞர்களிடையே இசை வழி ஒருமைப்பாட்டை உருவாக்குவதும் இவ்விழாவின் நோக்கங்களில் அடங்கும் என்று சுஜித்ரா ஜெயசீலன் தெரிவித்தார்.
''இந்தத் தளத்தைப் பயன்படுத்தி இசை துறையைச் சார்ந்தவர்களை எவ்வாறு நாம் ஒன்றிணைக்கிறோம் என்பதும் இவ்விழாவின் நோக்கம்தான். அதோடு, இந்தத் தலைமுறையோடு இது நின்றுவிடக்கூடாது. வளரும் தலைமுறையும் நாட்டம் செலுத்தி கற்க வேண்டும். அவர்களைக் கவரும் வகையில் பல்வேறு அம்சங்களைப் புகுத்தியுள்ளோம்,'' என்றார் அவர்.
இந்நிலையில், இளம் பெற்றோர் பெரும்பாலானோர் தங்கள் பிள்ளைகளை இசைப் பள்ளியில் சேர்த்து, அவர்கள் அக்கலையில் மிளிரும் வகையில் பல முயற்சிகளை முன்னெடுப்பதாக சுஜித்ரா விவரித்தார்.
''நம் நாட்டில் இசை கற்க வேண்டும் என்ற விழிப்புணர்வு கண்டிப்பாக அதிகரித்துள்ளது. இது நம் கலை; இதனை நாம் கற்க வேண்டும் என்ற எண்ணம் இளம் பெற்றோரிடையே அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி, மனநலத்திற்கும் இசை பெரும்பங்காற்றுகிறது. அதிலும் ராகங்களை ஆதாரமாகக் கொண்ட கர்நாடக இசையின் பங்கு அளப்பரியது,'' என்றார் அவர்.
இவ்வாண்டு ஏப்ரல் மாதம் தமிழிசை சாரல் எனும் நிகழ்ச்சியுடன் தொடக்கம் கண்ட இவ்விழாவில் பத்து நாடுகளிலிருந்து 800-க்கும் மேற்பட்ட இசை, நடனக் கலைஞர்களுக்கு பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மார்கழி உற்சவம், ராக ராமயணம், sembang budaya போன்ற பல்வேறு படைப்புகளை உள்ளடக்கி இருக்கும் இந்த இசை விழாவில் சிறுவர்களும் பங்கேற்கின்றனர்.
கோலாலம்பூர், பிரிக்ஃபீல்ட்ஸ், Temple of Fine Arts-இல் மூன்று நாள்களுக்கு நடைபெறும் இந்த இசை விழாவின் முதல் நாளான நேற்று நாட்டின் மூத்த கலைஞர்கள் அறுவருக்கு விருது வழங்கி கௌரவிக்கவிக்கப்பட்டது.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]