பாலிக் புலாவ், 26 டிசம்பர் (பெர்னாமா) -- 22,480 ரிங்கிட் இழப்பை ஏற்படுத்திய வழக்கில் தமது வங்கிக் கணக்குப் பயன்படுத்தப்பட்டதாக சுமத்தப்பட்ட இரு குற்றங்களை, பொருள் அனுப்பும் சேவை பணியாளர் ஒருவர் இன்று பாலிக் புலாவ் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மறுத்துள்ளார்.
மஜிஸ்திரேட் சியா ஹுய் திங் முன்னிலையில் அக்குற்றங்கள் வாசிக்கப்பட்டபோது 28 வயதுடைய முஹமட் ஹரிசி அபு பாக்கார் அந்த வாக்குமூலத்தை அளித்தார்.
தமது Simpanan Nasional வங்கிக் கணக்கில் ஆல்பன் சுடேஷ் ஜோர்ஜ்க்கு சொந்தமான 10,800 ரிங்கிட் நிதியை வைத்திருந்ததாக முஹமட் ஹரிசி மீது முதல் குற்றம் பதிவாகியுள்ளது.
பின்னர், அதே வங்கிக் கணக்கில் லோ டெக் தியோங்கிற்கு சொந்தமான 11,680 ரிங்கிட் நிதியை வைத்திருந்ததாக அவர் மீது இரண்டாம் குற்றம் சுமத்தப்பட்டது.
தமக்கு சொந்தமான ஏ.டி.எம் அட்டையை அல்வின் லிம் எனும் நபரிடம் J&T பொருள் அனுப்பும் சேவை மூலம் ஹரிசி அனுப்பியதால் இச்சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 424B-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவரை 6,000 ரிங்கிட் ஜாமின் தொகை மற்றும் தனிநபர் ஒருவரின் உத்தரவாதத்தின் பேரில் விடுவித்த நீதிமன்றம் இவ்வழக்கின் மறுசெவிமடுப்பை அடுத்தாண்டு ஜனவரி 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]