அரசியல்

தெங்கு சஃப்ருல் வேறு கட்சியில் இணைகிறாரா? - எந்த அறிவிப்பையும் அம்னோ பெறவில்லை

14/12/2024 04:49 PM

கோலாலம்பூர், 14 டிசம்பர் (பெர்னாமா) - தெங்கு டத்தோ ஶ்ரீ  சஃப்ருல் அப்துல் அசிஸ், அம்னோவில் இருந்து விலகி வேறு கட்சியில் இணைவது தொடர்பாக  அம்னோ உச்ச மன்றத்திடமிருந்து எந்தவொரு அறிவிப்பையும் பெறவில்லை என்று கட்சி தலைவர் டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

அவ்விவகாரம் குறித்து கலந்து ஆலோசிக்க தெங்கு சஃப்ருல் தம்மை இதுவரை சந்திக்கவில்லை என்று சாஹிட் கூறினார்.

"ஒருமைப்பாட்டு அரசாங்கத்தில் உள்ள கட்சிகள், கூட்டணியில் இடம்பெற்றுள்ள இதர கட்சி உறுப்பினர்களை தங்களது கட்சியில் இணைத்துக் கொள்ளக் கூடாது. அவ்வாறு நிகழ்ந்தால் மனகசப்பு ஏற்படும். அந்த சூழலில், நம்மிடையே ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டும். அந்தந்த தலைவர்கள் சொந்தக் கட்சியின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்,'' என்றார் அவர்.

சனிக்கிழமை, கோலாலம்பூரில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரான தெங்கு சஃப்ருல், சிலாங்கூர் மாநில மந்திரி புசாராக நியமிக்கப்படுவதற்கு கெஅடிலான் கட்சியில் இணையவிருப்பதாக ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தன.

இருப்பினும் இது தொடர்பாக விவரம் தெரியாததால் இதனை உறுதிப்படுத்த இயலவில்லை என்று அஹ்மட் சாஹிட் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)