அரசியல்

பெரிக்காத்தானிலிருந்து விலகுவதாக எஸ்ஏபிபி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

14/12/2024 05:24 PM

கோத்தா கினபாலு, 14 டிசம்பர் (பெர்னாமா) - பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இருந்து விலகுவதாக சபா முன்னேற்ற கட்சி, எஸ்ஏபிபி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. 

நவம்பர் மாதம் 23-ஆம் தேதி நடைபெற்ற கட்சியின் உச்ச மன்ற கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாவும், கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து பெரிக்காத்தான் நேஷனலிடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் எஸ்ஏபிபி கூறியது.

எதிர்வரும் சபா மாநில தேர்தலில், பெரிக்காத்தான் நேஷனல் போட்டியிடவிருப்பதை தமது தரப்பு அறிந்திருப்பதாக எஸ்ஏபிபி தலைவர் டத்தோ யொங் டெக் லீ இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

பெரிக்காத்தான் நேஷனலின் அம்முடிவு, சபா மாநிலத்தின் 73 சட்ட மன்றத் தொகுதிகளிலும் அம்மாநிலத்தில் உள்ள கட்சிகள் மட்டுமே போட்டியிட வேண்டும் என்றஎஸ்ஏபிபி-இன் நிலைப்பாடு மற்றும் கொள்கைக்கு எதிராக அமைத்துள்ளது என்று அவர் விளக்கினார்.

சபா மக்கள் கூட்டணி ஜிஆர்எஸ்-இல் இடம் பெற்றுள்ள எஸ்ஏபிபி, சபா மாநில தேர்தலில் தனது வேட்பாளர்களைக் களமிறக்க திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக ஜிஆர்எஸ்-இடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் யொங் கூறினார். 

இதனிடையே, மாநில தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில், நம்பிக்கை கூட்டணி மற்றும் ஜிஆஎர்எஸ் உடனான ஒத்துழைப்பு குறித்து உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்று எஸ்ஏபிபி, ஜிஆர்எஸ் உச்சமன்றத்தை வலியுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)