கோலாலம்பூர், 14 டிசம்பர் (பெர்னாமா) -- அரசாங்க பல்கலைக்கழகங்களில், கல்வி கேள்விகளில் மட்டுமின்றி புறப்பாட நடவடிக்கைகள், தன்னார்வ நடவடிக்கைகள், தலைமைத்துவம் என்று, பல தகுதிகளின் அடிப்படையில் சிறந்து விளங்கும் மாணவருக்கு, ANUGERAH PELAJARAN DIRAJA எனும் அரச கல்வி விருது, ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படுகிறது.
அவ்வகையில் மருந்தியல் புலத்தில், அரச கல்வி விருதைப் பெற்ற முதல் இந்திய மாணவர் என்ற பெருமையை, மலாயாப் பல்கலைக்கழகத்தின் தாதியர் துறை மாணவர், காசிபன் முனியாண்டி பெற்றுள்ளார்.
கோலாலம்பூர், தாமான் டேசா பெத்தாலிங்கில் வசிக்கும் காசிபன், அவரின் பெற்றோருக்கு மூத்த புதல்வர் ஆவார்.
கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் பல்கலைக்கழகத்தில் படிக்கத் துவங்கிய காசிபனுக்கு, அவர் தந்தையின் இழப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இருந்தப்போதிலும், தன் தந்தையின் கனவை நனவாக்கும் குறிக்கோளோடும் தாயின் இலட்சியத்திற்காகவும் மனம் தளராது முயன்றதன் பயனாக இவ்விருதை வென்றதாக காசிபன் தெரிவித்தார்.
''ஏனென்றால் எனது குடும்பத்தில், அரசாங்க பல்கலைகழகத்தில் பயின்ற பட்டதாரிகள் யாருமில்லை. நான் தான் முதலாவேன். நான் பல்கலைகழகத்தில் பயில வேண்டுமென்று தந்தை ஆசைப்பட்டார்.எனக்கு இயங்கலை வாய்ப்பு பெற்ற போது தந்தை உயிருடன் இருந்தார்.பல்கலைகழகத்தில் சேரும் போது தந்தை உயிரிழந்துவிட்டார்.இவ்வளவு கடினமாக இருந்தது எனது பயணம். இந்தக் கடினமான பயணத்தில், நான் துவண்டு விடாமல் இருக்க எனது அம்மா அறிவுறுத்தினார்.எனது தம்பி தங்கைகளுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்க விழைகிறேன், '' என்றார் அவர்.
தாதியர் துறையில் பெண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்ற எண்ணத்தை, காசிபனின் வெற்றி மாற்றி அமைத்துள்ளது.
இக்காலகட்டத்தில் தாதியர்களுக்கான வேலை வாய்ப்புகள் உலகம் முழுவதிலும் அதிகமாக இருப்பதாக கூறிய அவர், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் ஆசைகளுக்கு உந்துதலாக விளங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
''இப்போது ஆண் தாதியர்களை எடுத்துக் கொண்டால், அதிகமான வேலை வாய்ப்புகள் உள்ள துறை. அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு போன்ற சிறப்பு பிரிவுகளுக்கு ஆள் வலிமை தேவைப்படும். நோயாளிகளைக் கவனித்துக் கொள்ள அதிகமான ஆண் தாதியர்கள் தேவைப்படுகின்றனர். ஆண்களும் தான் ஒரு சேவையாற்றும் தாதியர் என்று பெருமிதத்தோடு கூறலாம், '' என்று காசிபன் தமது கருத்தினைப் பகிர்ந்து கொண்டார்.
தமது வெற்றி இதர இந்திய மாணவர்களுக்குத் தூண்டுதலாக அமையும் என்று தாதியர் துறையில் முனைவராக முயற்சிக்கும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
''என்னுடன் 25 பேர் இந்த அரச கல்வி விருதுக்காக போட்டியிட்டனர். அதிலிருந்து இருவருக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்படும். என்னுடன் போட்டியிட்ட அனைத்து மாணவர்களுமே எல்லா துறையிலும் சிறந்து விளங்கியதால் போட்டி கடினமாகவே இருந்தது. அவர்களின் நம்மை எப்படி தனித்துவமாக காட்டிக் கொள்ள முடியும் என்பதை அறிந்து செயல்பட்டேன். என்னால் நம்பவே முடியவில்லை, '' என்றார் அவர்.
பல்கலைக்கழக மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுத்து தனித்துவமாக திகழ்ந்தால் உயர்க்கல்வியில் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று காசிபன் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)