ஜார்ஜ்டவுன், 14 டிசம்பர் (பெர்னாமா) -- சிகிச்சைக்கான கட்டணத்தைப் பெற்றோர் முன்கூட்டியே செலுத்தத் தவறியதால் இறந்த சிசுவின் உடலைத் தனியார் மருத்துவமனை தடுத்து வைத்ததாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு தொடர்பாக, தனியார் மருத்துவ கட்டுப்பாட்டு பிரிவு, சிகேஏபிஎஸின் விசாரணை அறிக்கைக்காக சுகாதார அமைச்சு காத்திருக்கிறது.
அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்பே, அச்சம்பவம் தொடர்பான அறிக்கை பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் தெரிவித்தார்.
1998-ஆம் ஆண்டு தனியார் சுகாதார வசதிகள் மற்றும் பராமரிப்பு சேவைகள் சட்டம், சட்டம் 586க்கு உட்பட்டு நாட்டில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளைச் சுகாதார அமைச்சு கண்காணித்து வருவதாக டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் கூறினார்.
''பின்னணி மற்றும் பலவற்றின் அடிப்படையில் இந்த வழக்கு மிகவும் தனித்துவமானது. எனவே நியாயமாக மேற்கொள்ள, சரியான மற்றும் துல்லியமான விசாரணை அறிக்கைக்குக் காத்திருப்போம். நிச்சயமாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நாங்கள் அனுதாபப்படுகிறோம், '' என்றார் அவர்.
சனிக்கிழமை, பினாங்கு ஜார்ஜ்டவுனில், மலேசியாவின் Community First Responder மாநாட்டை தொடக்கி வைத்தப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
சிலாங்கூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தந்தை கட்டணம் செலுத்தாததால் இறந்த ஆண் சிசுவின் உடல் 16 நாள்களாக குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.
இருப்பினும், கட்டணம் செலுத்துவதற்கு முன்பே, சிசுவின் உடல் அடக்கம் செய்யப்பட்டதாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை கடந்த புதன்கிழமை அறிவித்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)