அரசியல்

திறந்த மனதுடன் சஃப்ரூலை கெஅடிலான் வரவேற்கும் - அன்வார்

15/12/2024 06:03 PM

கோலாலம்பூர், 15 டிசம்பர் (பெர்னாமா) -- அம்னோ உச்சமன்ற செயற்குழு உறுப்பினர் தெங்கு டத்தோ ஸ்ரீ சஃப்ரூல் அப்துல் அசிஸ், கெஅடிலான் கட்சியில் இணைவது தொடர்பான கலந்துரையாடல்கள் நடைபெற்றதைப் பிரதமரும் கெஅடிலானின் தலைவருமான டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராகிம் உறுதிபடுத்தினார் .

முதலீடு, வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கெஅடிலானில் இணைய விரும்பினால் அவரை திறந்த மனதுடன் அக்கட்சி வரவேற்கும் என்றும் அன்வார் கூறுகிறார்.

''எங்கள் கொள்கை, நாங்கள் திறந்த அணுகுமுறையை அமல்படுத்துகிறோம். தங்கள் பங்கை அளிக்கலாம். ஆனால் அம்னோ கட்சியுடனான உறவு நல்ல முறையில் இருப்பதை உறுதி செய்து இணைய கட்சியில் வேண்டும். எங்கள் கொள்கை என்னவென்றால், நாங்கள் கெஅடிலானில் இணைவதை ஊக்குவிக்க மாட்டோம். எனினும், நாங்கள் அவர்களைத் தடுக்கவும் மாட்டோம். அவர்களின் முடிவை மதிக்கிறோம், '' என்றார் அவர்.

இன்று ஷா ஆலமில் நடைபெற்ற கெஅடிலானின் சிறப்பு பொது பேரவையில் கலந்துகொண்டப் பின்னர் டத்தோ ஶ்ரீ அன்வார் செய்தியாளர்களிடம் பேசினார்.

மற்றுமொரு நிலவரத்தில், அம்னோ உச்சமன்ற உறுப்பினாரான தெங்கு டத்தோ ஸ்ரீ சஃப்ரூல் அப்துல் அசிஸ், கெஅடிலானில் இணையவிருப்பதாக எழுந்துள்ள ஆருடங்களுக்கு விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவிருக்கின்றார்.

அக்கட்சியின் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்குப் பதிலாக சிலாங்கூர் மாநில மந்திரி புசாராக, தாம் பதவி ஏற்பதாக வெளியான கூற்றுக்கும் தாம் பதில் அளிக்கவிருப்பதாக முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சருமான தெங்கு சஃப்ரூல் தெரிவித்தார்.

''என்னை உட்படுத்திய இந்த அரசியல் விவகாரம் குறித்து நான் எந்தக் கருத்தையும் கூறவில்லை. அதேவேளையில், சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியின் பதவிக்காலம் முடிவடையும் என்று நேற்று கேள்விப்பட்டேன். அதனால் அதிகமான அனுமானங்கள் கணிக்கப்பட்டு வருகின்றன. இவ்விவகாரம் குறித்து விரைவில் நான் ஒரு அறிக்கை வெளியிடுவேன், '' என்றார் அவர்.

இன்று சிலாங்கூர், சுங்கை பெசாரில் நடைபெற்ற சமூகநல ஓட்டப் போட்டியான கித்தாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் தெங்கு டத்தோ ஸ்ரீ சஃப்ரூல் அப்துல் அசிஸ் அவ்வாறு கூறினார்.

கெஅடிலான் சிறப்பு பொது பேரவையில் இவ்விவகாரம் குறித்து பேசப்படுமா என்று அவரிடம் வினவியபோது, அது குறித்து தமக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)