புத்ராஜெயா, 16 டிசம்பர் (பெர்னாமா) -- மலேசியாவிற்கு இரண்டு நாள்கள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருக்கும் தாய்லாந்து பிரதமர் பெத்தோங்தான் ஷினாவத்ராவுக்கு இன்று புத்ராஜெயா, பெர்டானா புத்ரா கட்டிடத்தில் அதிகாரப்பூர்வ வரவேற்பு வழங்கப்பட்டது.
காலை மணி 9 அளவில் பெத்தோங்தான் ஷினாவத்ராவைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்ற பின்னர் இரு நாடுகளின் தேசிய கீதங்கள் ஒலிக்கப்பட்டன.
தாய்லாந்து பிரதமர் தம்பதியருடன் உடன் வந்த பேராளர்களை, கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் சாலிஹா முஸ்தபா மற்றும் மூத்த அரசாங்க அதிகாரிகளும் வரவேற்றனர்.
துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி, டத்தோஸ்ரீ ஃபதில்லா யூசுப் மற்றும் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் அமைச்சர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அரச மலேசிய இராணுவப் படையின் முதல் பட்டாலியனின் மூன்று அதிகாரிகள் உட்பட வெவ்வேறு பதவிகள் கொண்ட 102 உறுப்பினர்களின் மரியாதை அணிவகுப்பையும் பெத்தோங்தான் பார்வையிட்டார்.
இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம், தாய்லாந்தின் 31ஆவது பிரதமராக பெத்தோங்தான் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் மலேசியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
இரு நாடுகளுக்கு இடையிலான இருவழி உறவு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்ட ஏழாவது மலேசியா-தாய்லாந்து வருடாந்திர கலந்துரையாடலில் பங்கேற்கவும் அவர் இங்கு வருகைப் புரிந்துள்ளார்.
இதனிடையே, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இரு நாட்டு தலைவர்களும் கையெழுத்திடுவர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)