சான் பிரான்சிஸ்கோ, 16 டிசம்பர் (பெர்னாமா) -- இசைத் துறையில் மறுக்க மறக்க முடியாதவர்களில் ஒருவரான பிரபல தபேலா இசைக்கலைஞர் மாஸ்ட்ரோ சாகிர் ஹுசேன் தமது 73-ஆவது வயதில் நேற்று காலமானார்.
நாள்பட்ட நுரையீரல் பிரச்சனையான 'Idiopathic Pulmonary Fibrosis' எனும் நோய்க் காரணமாக அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ மருத்துவமனையில் கடந்த இரண்டு வாரங்களாக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
1951-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி பிறந்த சாகிர் ஹுசேன், தமது 11-ஆவது வயதில் இசைத் துறையில் கால் பதித்தார்.
பிரபல இசைக்கலைஞர் அல்லா ராக்காவின் மூத்த மகனான இவர், தமது தந்தையைப் பின்பற்றி தபேலா கலையை உலக அரங்கிற்கு கொண்டு சென்றார்.
தமது 18-ஆவது வயதிற்குள், அனைத்துலக அளவில் இசைப்பயணம் மேற்கொண்டு திகைப்பூட்டும் தனி நிகழ்ச்சிகள் மற்றும் உலக இசைக்கலைஞர்களுடனான முன்னோடி கூட்டுப் படைப்புகளின் வழி இந்தியாவிலும் வெளிநாட்டிலும் தபேலாவின் நிலையை உயர்த்தினார்.
1990 இல் சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்ற சாகிர் ஹுசேன், இந்தியாவின் தேசிய இசை, நடனம் மற்றும் நாடக அகாடமியான சங்கீத் நாடக அகாடமி வழங்கிய இந்த அங்கீகாரத்தைப் பெற்ற இளைய இசைக்கலைஞர்களில் ஒருவராவார்.
மேலும், இவ்வாண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெற்ற 66-ஆவது கிராம்மி விருதுகள் விழாவில் வென்ற மூன்று விருதுகள் உட்பட சாகிர் ஹுசேன் இதுவரை ஏழு முறை கிராம்மி விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு நான்கை வென்றுள்ளார்.
முன்னதாக, 2009-ஆம் ஆண்டில் அவர் தமது முதலாவது கிராம்மி விருதை வென்றார்.
2024-இல், ஒரே ஆண்டில் மூன்று கிராமி விருதுகளை வென்ற இந்தியாவின் முதல் இசைக்கலைஞர் என்ற பெருமையும் சாகிர் ஹுசேன்னை சேரும்.
அதைத் தவிர்த்து இசைத்துறையில் அவரின் பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் பாராட்டி 1988-ஆம் ஆண்டில் பத்மஶ்ரீ, 2002-இல் பத்ம பூஷன், 2023-இல் பதம் விபூஷன் ஆகிய உயரிய விருதுகளையும் வழங்கி இந்திய அரசு அவரை கௌரவித்துள்ளது.
இசையமைப்பாளர், தாள வாத்தியக் கலைஞர், இசை தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட நடிகர் என்று பல்வேறு பரிணாமங்களைக் கொண்ட அவரின் மறைவிற்கு உலகளவில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)