பொது

3,000 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான வர்த்தக இலக்கை அடைய மலேசியாவும் தாய்லாந்தும் உறுதி

16/12/2024 04:10 PM

புத்ராஜெயா, 16 டிசம்பர் (பெர்னாமா) -- 2027ஆம் ஆண்டிற்குள் மூவாயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான வர்த்தக இலக்கை அடைய மலேசியாவும் தாய்லாந்தும் உறுதிபூண்டுள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரத்தின் பெரும் ஆற்றலைக் கருத்தில் கொண்டு, நிர்ணயிக்கப்பட்ட அந்த இலக்கை வேண்டும் என்று மலேசியா நம்பிக்கை கொண்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

ஆசியான் நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க மலேசியாவும் தாய்லாந்தும் இணக்கம் கண்டதாக பிரதமர் கூறினார்.

''ஆசியான் நாடுகளுக்கு இடையில் உள்ள வர்த்தகம் மற்றும் கூட்டு முதலீடுகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை ஆதரிப்பதற்கும் நாங்கள் இருவரும் ஒப்புக் கொண்டுள்ளோம். 2027-ஆம் ஆண்டிற்குள் 3,000 கோடி அமெரிக்க டாலர் இலக்கை நிர்ணயித்துள்ளோம். இது மிகப் பெரிய லட்சியமாகத் தெரிகிறது. ஆனால் தாய்லாந்து மற்றும் மலேசியாவில் உள்ள மிகப்பெரிய பொருளாதார ஆற்றலைப் பார்க்கும்போது, அது நாம் இணைந்து செயல்பட வேண்டிய ஒன்றாகும், '' என்றார் அவர்.

2030ஆம் ஆண்டு வாக்கில் உலகளாவிய ஹலால் பொருளாதாரம், ஐந்து லட்சம் கோடி அமெரிக்க டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே, இரு நாடுகளும், அத்துறையில் அதிக இணக்கத் தன்மையை உருவாக்குவதற்கு, இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற இரு தரப்பு சந்திப்புக் கூட்டத்தில் அவ்விரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

''ரப்பர் மற்றும் ஹலால் தொழில்துறைகளில் ஒத்துழைப்புக்கான சாத்தியக் கூறுகளையும் நான் எடுத்துரைக்கிறேன். இதன் மூலம் நாம் இணைந்து செயல்பட முடியும். இதனால் நம் இரு நாடுகளும் பயனடையும், '' என்று பெத்தோங்தான் ஷினாவத்ரா கூறினார்.

பண்பாடு, கலை மற்றும் பாரம்பரிய ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் உட்பட ரப்பர் தொழில்துறை மேம்பாடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகிய இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டு இன்று பரிமாறிக் கொள்ளப்பட்டன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)