உலகம்

தென் கொரிய ஆளும் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஹான் அறிவிப்பு

16/12/2024 04:23 PM

சியோல், 16 டிசம்பர் (பெர்னாமா) -- தென் கொரிய ஆளும் கட்சியின் தலைவர் ஹான் டோங்-ஹூன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அந்நாட்டு அதிபர் யூன் சுக் இயோல் அதிகாரப்பூர்வ கடமைகளை மேற்கொள்வதில் இருந்து இடைநீக்கம் செய்ய நடத்தப்பட்ட நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பில் எதிர்கட்சி வெற்றி பெற்ற இரண்டு நாட்களில் ஹான் இந்த அறிவிப்பைச் செய்துள்ளார்.

இராணுவச் சட்டத்தை அமல்படுத்த யூன் மேற்கொண்ட குறுகிய கால முயற்சி, அந்நாட்டில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

இதனால், அவருக்கு எதிராக தென் கொரியாவின் எதிர்க்கட்சித் தலைமையிலான நாடாளுமன்றம், அவரை பதவியில் இருந்து நீக்க இரண்டாவது வாக்கெடுப்பை நடத்தியதோடு, அதில் வெற்றியும் பெற்றது.

இந்நிலையில், பதவி விலக தாம் எடுத்த முடிவு குறித்து சற்றும் வருத்தம் கொள்ளவில்லை என்று ஹான் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, யூன் மீதான குற்றச்சாட்டுகளை தென் கொரியா அரசியலமைப்பு நீதிமன்றம் இன்று முதல் மறுஆய்வு செய்யத் தொடங்கும்.

யூனை பதவியில் இருந்து நீக்குவதா அல்லது மீண்டும் பதவியில் அமர்த்துவதா என்பதை முடிவு செய்ய நீதிமன்றத்திற்கு ஆறு மாதங்கள் வரை கால அவகாசம் உள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)