கோலாலம்பூர், 16 டிசம்பர் (பெர்னாமா) -- சொந்த வீடு வாங்க எண்ணம் கொண்டிருக்கும் தனிநபர்கள், அதற்கான செயல்முறைகளில் ஈடுபடும் போது, சட்ட ரீதியாக பல வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
அதிலும் குறிப்பாக, சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள், வங்கிக் கடன் செயல்முறை, ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது ஆகிய முக்கிய கூறுகளில் தெளிவைப் பெற்றிருப்பது மிக அவசியம்.
அந்த வகையில், சுயமாக வீடு வாங்கும்போது, சட்ட ரீதியாக பின்பற்ற வேண்டியவை மற்றும் பின்பற்றக் கூடாதவை என்ன என்பதை, இன்றைய சட்டம் தெளிவோம் அங்கத்தில் காண்போம்.
முதல் கட்டமாக, ஒரு வீட்டை வாங்க விரும்புவோர் சம்பந்தப்பட்ட வீடு குறித்து முழு தகவலை கொண்டிருப்பதோடு ஓர் ஆய்வை மேற்கொள்வது சிறப்பு என்று வழக்கறிஞர் குணாளன் நாராயண சாமி தெரிவித்தார்.
அந்த ஆய்விற்கான ஆலோசனைகளை பெறுவதற்கு வழகறிஞர்களின் உதவியை நாடலாம் என்றும் அவர் விளக்கினார்.
''ஓர் ஆலோசனையைத் தேட வேண்டும். இதனை ஒரு வழக்கறிஞர் மூலமாக செய்ய முடியும். அந்த வழக்கறிஞர் ஒரு நில ஆய்வை செய்வார். அதன் மூலம், அந்த சொத்து யார் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது? வங்கியில் கடன் உள்ளதா? அல்லது ஏதேனும் தடைகள் உள்ளதா? சந்தை விலையும் ஏறக்குறைய நமக்கு தெரிய வேண்டும். நில வரி, மதிப்பீட்டு வரி ஆகியவையும் நமக்கு தெரிய வேண்டும்,'' என்றார் அவர்.
அதன் பின்னர், ஒப்பந்த கடிதங்களில் கையெழுத்திடுவதற்கு அல்லது முன்பணம் செலுத்துவதற்கு முன்னதாக வீட்டின் முகவர் அல்லது உரிமையாளரிடமிருந்து பத்து முதல் 14 நாட்களுக்கு கால அவகாசத்தை பெற்றுக் கொள்ளலாம்.
அந்த காலக்கட்டத்தில், சம்பந்தப்பட்ட வீட்டை வாங்குவதற்கான வங்கிக் கடன் தகுதிகள் குறித்து உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்று குணாளன் தெளிவுப்படுத்தினார்.
''சம்பளச் சீட்டு, உறுதி கடிதம், ஊழியர் சேமநிதி வாரியம் அறிக்கைகளைக் கொண்டு சென்றால், சம்பந்தப்பட்ட வங்கி உங்களுக்கான கடனுதவி செயல்முறைகளை மேற்கொள்ளும். அதன் பின்னர், மீண்டும் உங்களது வழக்கறிஞரிடம் விதிமுறை மற்றும் நிபந்தனைகள் தெரிந்துக் கொள்ள வேண்டும். பணம் கிடைத்தப் பின்னர், வழக்கறிஞர் மூலமாக கட்டணம் செலுத்தினால் பாதுகாப்பாக இருக்கும்,'' என்றார் அவர்.
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு முன்பணம் செலுத்தியப் பின்னர், விற்பனை மற்றும் கொள்முதல் தொடர்பான விதிமுறை மற்றும் நிபந்தனைகள் வழக்கறிஞர் மூலம் விவரிக்கப்படும்.
அதில், பணம் செலுத்தும் செயல்முறைகள், கால அவகாசம் உட்பட பல முக்கிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
அதன் பின்னர், வங்கி அல்லது வழக்கறிஞர் மூலம் வீட்டின் முகவர் அல்லது உரிமையாளருக்கு பணம் செலுத்தினால், எந்தவொரு சிக்கலும் ஏற்படாது என்று அவர் கூறினார்.
இதனிடையே, வீடு வாங்கும் போது செய்யக்கூடாத முக்கியமான விஷயத்தை குணாளன் இவ்வாறு விளக்குகிறார்.
''அதாவது ஒரு வீட்டை பார்த்தவுடன், உடனடியாக பணத்தை செலுத்த சொல்லும் நபர்கள் உள்ளனர். உடனே, முன்பணத்தை செலுத்த வேண்டும் என்று கூறுவார்கள். அந்த மாதிரி ஒரு செயலை அவசரமாக செய்ய வேண்டாம். ஒரு சோதனையை மேற்கொண்டு வழக்கறிஞர் மூலமாக செயல்படுங்கள். முன்பணமும் முதல் ஒப்பந்தக்கடித்திலும் கையெழுத்திட முடியுமா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 10 விழுக்காடு பணம் செலுத்த வேண்டும்தான். இரண்டு விழுக்காடு கூட செலுத்த முடியும் என்றுக் கூறுவார்கள். ஆனால், அதனை முதலில் செலுத்தாமல் கால அவகாசம் எடுத்து சட்ட ரீதியாக செயல்படுங்கள்,'' என்றார் அவர்.
எனவே, சொந்த வீடு வாங்க எண்ணம் கொண்டிருப்பவர்கள், சட்ட ரீதியில் செயல்முறைகளைப் பின்பற்றுவதோடு, அதன் விதிமுறை மற்றும் நிபந்தனைகள் ஆராய்ந்து செயல்படுவதே சிறப்பு என்று குணாளன் அறிவுறுத்தினார்.
அதுவே, அவர்களை சட்ட சிக்கலில் நுழைவதை தவிர்ப்பதோடு, வீட்டிற்கான கட்டணம் செலுத்தி முடிக்கும் வரையில் பாதுகாப்பை தரும் என்று அவர் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)