பொது

விடுமுறை காலத்தில் 14% அதிகரிக்கக்கூடும் போக்குவரத்து நெரிசல்

17/12/2024 05:04 PM

கோலாலம்பூர், 17 டிசம்பர் (பெர்னாமா) --   கிறிஸ்மஸ் பண்டிகை மற்றும் ஆண்டிறுதியின் நீண்ட விடுமுறையை முன்னிட்டு, வரும் டிசம்பர் 20-ஆம் தேதி தொடங்கி அடுத்தாண்டு ஜனவரி இரண்டாம் தேதி வரை போக்குவரத்து நெரிசல் 14 விழுக்காடு வரை அதிகரிக்கும் என்று மலேசிய PLUS நிறுவனம் தெரிவித்தது.

தினசரி பயணிக்கும் 18 லட்சத்து 50 ஆயிரம் வாகனங்களை விட அக்காலக்கட்டத்தில் 21 லட்சத்து 20 ஆயிரம் வாகனங்கள் வரை பயணிக்கும் என்று அந்நிறுவனம் கணித்துள்ளது.

வாகன நெரிசலை தவிர்க்க, MyPLUS செயலி மூலம் பெறப்படும் MyPLUS-TTA இலக்கவியல் அட்டவணையைப் பின்பற்றி தங்களின் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறு, இன்று வெளியிட்ட அறிக்கையின் வழி நெடுஞ்சாலை பயனர்களை PLUS கேட்டுக்கொண்டது.

மக்கள் தங்களின் பயணங்களைத் திட்டமிடுவது மட்டுமின்றி சுமூகமான போக்குவரத்திற்கு உதவுவதும் அந்த அட்டவணையின் நோக்கம் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, X@plustrafik செயலி, மின்னியல் அறிவிப்பு பலகை உட்பட நாட்டின் முன்னணி வானொலி அலைவரிசைகளில் போக்குவரத்து குறித்து அண்மைய தகவலை மக்கள் தெரிந்துகொள்ளலாம்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)