பொது

நாட்டில் 52%-க்கும் அதிகமானோர் 5G தொழில்நுட்பத்தினால் நன்மை

17/12/2024 05:17 PM

புத்ராஜெயா, 17 டிசம்பர் (பெர்னாமா) -- நாட்டில் 52 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் 5G தொழில்நுட்பத்தினால் நன்மை அடைந்ததன் வழியாக 5G சேவை அமலாக்கத்தில் மலேசியா குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இச்சாதனை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை மட்டும் காட்டவில்லை.

மாறாக, நாட்டின் 5G உள்கட்டமைப்பை நிறைவு செய்வதிலும் வெற்றியை நிரூபித்திருப்பதாக தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

''இந்த பிரச்சனைகளில் பலவற்றை நம்மால் தீர்க்க முடியாது. அமைச்சு, எம்சிஎம்சி மட்டுமல்ல, முதல் பகுதி என்று அழைக்கும் கோபுர கட்டுமானத்திலும், இரண்டாவது பகுதியான தொலைத்தொடர்பு சேவை பெறுநர்கள் மத்தியிலும் நல்ல ஒத்துழைப்பு இல்லாமல் அதை தீர்க்க முடியாது. எனவே நாம் இன்னும் செய்ய வேண்டியது நிறைய உள்ளது,'' என்றார் அவர். 

புத்ராஜெயாவில், இன்று நடைபெற்ற தகவல் தொடர்பு அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்தில் ஃப்ஹமி ஃபட்சில் அதனைத் தெரிவித்தார்.

515 கோடி ரிங்கிட் செலவில் மேற்கொள்ளப்படும், தேசிய இலக்கவியல் இணைப்புத் திட்டம், ஜெண்டேலா தற்போது சரியான தடத்தில் பயணிப்பதாகவும் அதன் இறுதி அமலாக்கம் 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]