கோலாலம்பூர், 18 டிசம்பர் (பெர்னாமா) - ஓர் உணவகத்தில் தாம் புகைப் பிடித்து கொண்டிருந்த புகைப்படத்தை பரவலாகப் பகிரப்பட்டதை தொடர்ந்து அச்செயலுக்கு மன்னிப்பு கோரிய வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் அதற்கான அபராதத்தையும் செலுத்த தயார் என தெரிவித்துள்ளார்.
இது, தொடர்பில் இன்று காலை சிரம்பான் மாவட்ட சுகாதார அலுவலகம் பிகேடியிலிருந்து அபராத கடிதத்தை தாம் பெற்றிருந்ததையும் அவர் உறுதிப்படுத்தினார்.
''அந்த அபராதக் கடிதத்தை நான் பெற்றிருந்தேன். எவ்வளவு அபராதத் தொகை என்பதை உறுதிப்படுத்தவும், மேல் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அவர்கள் அந்த அபராதக் கடிதத்தை அனுப்பி இருக்கிறார்களா என்பது குறித்து தீர்மானிக்கவும் தேசிய சட்டத்துறை தலைவர் அலுவகத்தில் அக்கடிதம் ஒப்படைக்கப்படும். இது ஒரு கிராமத்தில் நிகழ்ந்த சம்பவம். இது அவர்களுக்கு கவலை அளித்தாலோ அல்லது இது ஒரு விவகாரமாக கிளர்ந்தாலோ அதற்காக நான் அவர்களிடம் மனதார மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்,'' என்றார் அவர்.
ஓர் உணவகத்தில் அமர்ந்தவாறு முஹமட் ஹாசான் புகைப்பிடித்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் பரவலாகப் பகிரப்பட்டது தொடர்பில் அவர் அவ்வாறு கருத்துரைத்தார்.
2024ஆம் ஆண்டு பொது சுகாதாரத்தை முன்னிறுத்தி புகைபிடிக்கும் பொருட்கள் கட்டுப்பாடு சட்டம் 852ஆவது விதியின் கீழ் உணவு வளாகங்களில் புகைபிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை அமல்படுத்துவதில், கடுமையான விவாதம் நிலவியது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)