கோலாலம்பூர், 18 டிசம்பர் (பெர்னாமா) - கடந்த மாதம் தனது வளர்ப்புப் பிராணியான பூனையை கட்டி இழுத்து துன்புறுத்திய காணொளி ஒன்று பரவலாகப் பகிரப்பட்டத்தைத் தொடர்ந்து அதன் உரிமையாளருக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று பத்தாயிரம் ரிங்கிட் அபராதம் விதித்து, தீர்ப்பளித்தது.
தமது மீதான குற்றத்தை கோ குவான் பான் என்பவர் ஒப்புக் கொண்ட வேளையில், நீதிபதி நோரினா சைனோல் அபிடின் அத்தீர்ப்பை வழங்கியதோடு அபராதத்தை செலுத்தத் தவறினால் இரு மாதங்களுக்கு சிறைத் தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பூனையை திரும்ப அழைத்துச் செல்வதற்கான எந்த விண்ணப்பமும் கிடைக்காத வரை கோலாலம்பூர் கூட்டரசு கால்நடை சேவைத் துறையின் கீழ் அது பாதுகாக்கப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த நவம்பர் 21ஆம் தேதி இரவு மணி 11.17 முதல் 11.42-க்குள், ஜாலான் கிள்ளான் லாமாவில் உள்ள அடுக்குமாடி வளாகத்தில் British Short Hair வகையிலான பழுப்பு நிற பூனை ஒன்றை கட்டி இழுத்துச் சென்று அதற்கு துன்பத்தை ஏற்படுத்தியதாக கோ மீது குற்றம் சாட்டப்பட்டது.
1953ஆம் ஆண்டு விலங்கியல் சட்டம், 647-ஆவது விதியின் கீழ் செக்ஷன் 44 உட்பிரிவு ஒன்று மற்றும் உட்பிரிவு D ஆகியவற்றுடன்..
2013ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட விலங்கியல் சட்டம் A1452 விதியின் கீழ் செக்ஷன் 44 உட்பிரிவு ஒன்று ஆகியவற்றின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுவதால், குற்றவாளிக்கு 50 ஆயிரம் ரிங்கிட் வரையில் அபராதம் அல்லது ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)