கோலாலம்பூர், 18 டிசம்பர் (பெர்னாமா) - மோசடி குற்றச்செயல்களினால் பாதிக்கப்பட்ட 50 வயதுடைய பெண்கள் எதிர்நோக்கும் இழப்பின் மதிப்பு இதர வயதினரைக் காட்டிலும் மிக அதிகம் என்று அரச மலேசிய போலீஸ் படை பிடிஆர்எம் தகவல் வெளியிட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு தொடங்கி கடந்தாண்டு வரை இணையம் வழியான மோசடிகளால் 59,974 பேர் பாதிக்கப்பட்டுள்ள வேளையில் அவர்களில் 11,157 பேர் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்று புக்கிட் அமான் வர்த்தக குற்றப் புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோ ஶ்ரீ ரம்லி முஹமட் யூசோப் தெரிவித்தார்.
இவ்வாண்டிலும் டிசம்பர் 15ஆம் தேதி வரையில் பதிவுசெய்யப்பட்ட 33,549 இணையம் வழியான மோசடி சம்பவங்களில் 8,022 அதாவது 24 விழுக்காடு 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் தொடர்புடையதாகும்.
இப்பிரச்சனையினால் பாதிக்கப்பட்ட, இந்த வயதினரின் எண்ணிக்கைக் குறைவாக இருந்தாலும், 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் இதனால் ஏற்பட்ட இழப்பின் மதிப்பு மிக அதிகமாகும் அதாவது 206 கோடிக்கும் மேல் என்று டத்தோ ஶ்ரீ ரம்லி கூறினார்.
''2024 டிசமபர் 15ஆம் தேதி வரை பதிவுசெய்யப்பட்ட 50 வயதிற்கு மேற்பட்டவர்களை உள்ளடக்கிய இழப்பின் மதிப்பு 782,813,952 ரிங்கிட்டை எட்டியுள்ளது. இது, பதிவு செய்யப்பட்ட மொத்த இழப்பான 1,453,966,347 ரிங்கிட்டில் 54 விழுக்காடாகும்,'' என்றார் அவர்.
இவ்வாண்டு ஜனவரி தொடங்கி டிசம்பர் 15ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில்
6 கோடியே 20 லட்சம் ரிங்கிட் மொத்த இழப்பை உட்படுத்தி பிடிஆர்எம் 6,909 மின்னியல் வர்த்தக மோசடி சம்பவங்களைப் பதிவு செய்துள்ளதாக ரம்லி குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)