கோலாலம்பூர், 18 டிசம்பர் (பெர்னாமா) -- நாக்கை கடிக்கும் பழக்கம் பொதுவாக பலருக்கு இருக்கும்.
அந்த பழக்கத்தினால் நாக்கு புண்ணாகும் பட்சத்தில், பாதிப்பு ஏற்பட்டு அது வாய் புற்றுநோய்க்கு இட்டுச் செல்லும் என்ற அதிர்ச்சி தகவல் நாளிதழில் வெளியானதை அடுத்து, அது குறித்த உண்மை விபரங்களை அலசியது பெர்னாமா செய்திகள்.
நாக்கில் ஏற்படும் புண் ஆறாமல், இரு வாரத்திற்குப் பிறகும் நீடித்தால், அது வாய் புற்றுநோய்க்கு சம்பந்தப்பட்ட புண்ணாக இருக்க வாய்ப்பு உள்ளதாக, இன்றைய நலம் வாழ அங்கத்தில், விவரிக்கின்றார் தேசிய புற்றுநோய் கழகத்தின் துணை இயக்குநர் டாக்டர் விக்னேஸ்வரி சுப்ரமணியம்.
''நாக்கில் புண் வெள்ளை நிறத்தில் அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் வலி இல்லாமல் இரண்டு வாரத்திற்கு நீடித்தால், அல்லது நாக்கு முழுவதும் பரவியிருந்தால் அது ஒரு அறிகுறி. இந்த நேரத்தில் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். இது வாய் புற்றுநோய் சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்கும். எனவே, இரவில் நாக்கு கடிக்கும் பழக்கம் மட்டும் ஒரு புற்றுநோய் சம்பந்தப்பட்ட விஷயம் கிடையாது. வேறு விஷயங்கள் இதில் இருந்தால் வாய் புற்றுநோய் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம்,'' என்றார் அவர்.
மது பானம் அருந்துதல், புகைப்பிடித்தல் மற்றும் வெற்றிலை, பாக்கு மெல்வது பழக்கும் கொண்டிருப்பவர்களுக்கும் மற்றும் HPV நோய் கண்டிருப்பவர்களுக்கும் வாய்புற்றுநோய் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக டாக்டர் விக்னேஸ்வரி
கூறுகின்றார்.
''HPV என்பது ஒரு கிருமி. அந்த கிருமி வாயில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம். கடந்த காலங்களில் இந்திய சமுதாயத்தில்தான் அதிகமானோர் வாய்ப்புற்றுநோய்க்கு ஆளாகியிருப்பதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அதற்கு வெற்றிலை, பாக்கு மெல்வது முக்கிய காரணமாக இருந்தது. இன்றைய காலக்கட்டத்தில் அந்தப் பழக்கம் குறைந்துக் கொண்டே வருவதால் புள்ளி விவரங்களும் அதற்கேற்ப பதிவாகின்றன,'' என்றார் அவர்.
நாக்கை கடிக்கும் பழக்கத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் அதனை கவனத்தில் எடுத்துக் கொள்ளும்படி டாக்டர் விக்னேஸ்வரி அறிவுறுத்தினார்.
அதோடு, இந்தப் பழக்கத்துடன் சேர்ந்து வரக்கூடிய வலி, காய்ச்சல் போன்ற
அறிகுறிகளையும் இவ்வாறு விளக்குகின்றார்.
''அதாவது வாயில் புண், கழத்தை சுற்றிலும் வீக்கங்கள் இருக்கும். காய்ச்சலுக்கு ஆளாக நேரிடும். வாய் மிகவும் வலியாக இருக்கும். அந்த மாதிரி நேரங்களில் ஒரு பல் மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெற வேண்டும். இல்லையென்றால், ஒரு மருத்துவரை நாட வேண்டும். அது சம்பந்தபட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். அதன் பின்னர்தான், நோயை உறுதிப்படுத்த முடியும்,'' என்றார் அவர்.
இதனிடையே, மலேசியாவில் 50 விழுக்காட்டிற்கு அதிகமாக மூன்றாம் மற்றும் நான்காம் கட்டத்தில்தான் வாய் புற்றுநோய் நோய் கண்டறியப்படுவதை புள்ளி விவரங்கள் காட்டுவதாக அவர் கூறினார்.
காலம் கடந்து மேற்கொள்ளப்படும் சிகிச்சையினால் உடல் ரீதியாக மட்டுமல்லாது பொருளாதார ரீதியிலும் பிரச்சனையை சந்திக்க நேரிடும் என்பதால் உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறப்பு என்கிறார் டாக்டர் விக்னேஸ்வரி.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)