கோலாலம்பூர், 19 டிசம்பர் (பெர்னாமா) -- நாட்டில் சில மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், வெள்ள நிலைமை மோசமடைந்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, கிளந்தானில் அதிகமானோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதை கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்டுள்ள அம்மாநில மக்களுக்காக இரண்டு லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள உதவிப் பொருட்களைத் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு, மலேசிய கூட்டுறவு ஆணையம், எஸ்.கே.எம் உடன் இணைந்து, இன்று அனுப்பியது.
கிளந்தான் மாநிலம் முழுவதிலும் உள்ள 14 நாடாளுமன்றங்களைப் பிரதிநிதிக்கும் வகையில் 14 வாகனங்களின் வழியாக அனுப்பப்பட்ட அந்த உதவிப் பொருட்கள் முறையே மக்களைச் சென்றடையும் என்று தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
''இன்று நாம் கிளந்தானிற்கு உதவி பொருட்கள் வழங்குகிறோம். மொத்தமாக 200,000 ரிங்கிட் நாம் அனுப்புகிறோம். சில இடங்களில் உதவிப் பொருட்கள் வழங்குவோம், சில இடங்கள் தோத்தோ வழங்குவோம், சில இடங்களில் துப்புறவுப் பணிக்கான பொருட்களை வழங்குவோம். அது சூழ்நிலையைப் பொருத்து வழங்கப்படும். அவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதற்கு ஏற்றார் போல் வழங்குவோம்'', என்று அவர் கூறினார்.
இதுவரை நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 லட்சத்து 80,000 ரிங்கிட் மதிப்பிலான உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவை அவர்களுக்குப் பெரும் பயனாக அமையும் என்றும் ரமணன் சுட்டிக்காட்டினார்.
அதோடு, மடானி அரசாங்கத்தின் முயற்சியில் அவ்வப்போது வழங்கி வரும் உதவிகள், எவ்வித பாகுபாடின்றி உதவி தேவைப்படும் அனைத்து மக்களுக்கும் முறையே சென்றடையும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
''டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும் ஒரு நன்றியைத் தெரிவிக்க வேண்டும். ஏனெனில், இது என்ன காண்பிக்கிறது என்றால் நம்முடைய மடானி அரசாங்கம் அனைவருக்குமானது. நாங்கள் தேர்வு செய்து, இவர் நம்முடைய ஆள், அவருக்குக் கொடுக்க வேண்டும். அவர் நம்முடைய ஆள் அல்ல அவருக்குக் கொடுக்க கூடாது என்று அல்ல. நீங்கள் மலேசியராக இருந்தால் போதுமானது. அதேபோல, எதிர்கட்சி மாநிலமாக இருந்தாலும் அவர்களுக்கும் முறையே உதவிகள் வழங்கப்படும்'', என்றார் அவர்.
இன்று, கோலாலம்பூர், மலேசிய கூட்டுறவு ஆணையக் கட்டிடத்தில், Skuad Ihsan Madani SKM Prihatin மற்றும் Gerakan Koperasi நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)