கோலா திரெங்கானு, 19 டிசம்பர் (பெர்னாமா) -- கடந்த செவ்வாய்கிழமை, இரண்டாவது கிழக்குக்கரை நெடுஞ்சாலையில் Toyota Alphard ரக காரில் 11 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள 36 கிலோகிராம் எடையிலான ஷாபு வகை போதைப் பொருளைக் கைப்பற்றியதோடு, ஆடவர் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர்.
மாலை மணி நான்கு அளவில், LPT 2 நெடுஞ்சாலை ரோந்து பிரிவினர் உதவியுடன் திரெங்கானு போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையினர், அந்த அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், பெசூட் வட்டாரத்தைச் சேர்ந்த 29 வயதான அச்சந்தேக நபரைக் கைது செய்ததாக, திரங்கானு மாநில போலீஸ் தலைவர், டத்தோ முஹமட் கைரி கைரூடின், இன்று, திரங்கானு போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
நடத்தப்பட்ட பரிசோதனையில் குவான்யின்வாங் என்று எழுதப்பட்டிருந்த 35 ஒளிபுகும் நெகிழிப் பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவை ஷாபு வகை போதைப் பொருளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கிள்ளான் பள்ளதாக்கில் ஒரு லட்சத்து 80,000 பேரின் பயன்பாட்டிற்கு விநியோகிக்கப்படவிருந்த அப்போதைப் பொருள், அண்டை நாட்டில் இருந்து கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)