பொது

கொலை வழக்கிலிருந்து இளைஞர் விடுவித்து விடுதலை

19/12/2024 05:03 PM

ஜோகூர் பாரு, 19 டிசம்பர் (பெர்னாமா) --   2018-ஆம் ஆண்டு ஆடம்பர அடுக்குமாடி ஒன்றின் முன்புறத்தில் ஒருவரை கொலைச் செய்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் சமையல்காரர் ஒருவரை ஜோகூர் பாரு உயர்நீதிமன்றம் இன்று விடுவித்து விடுதலை செய்தது.

இவ்வழக்கு விசாரணையின் இறுதியில் இக்குற்றத்திற்கான போதிய முகாந்திரங்களை அரசு தரப்பு சமர்ப்பிக்கத் தவறியதால் சம்பவத்தின்போது 21 வயதாக இருந்த கெல்வின் புவா கிம் ஹவ்வை, நீதிபதி டத்தோ அபு பகார் கதார்  விடுதலை செய்தார்.

மரணமடைந்தவருக்கு ஏற்பட்ட சாதாரண காயங்களினால் அவர் உயிரிழந்தார் என்பதை அரசு தரப்பு நிரூபிக்கத் தவறியதை நீதிமன்றம் கண்டறிந்ததாகவும் நீதிபதி அபு பகார் விவரித்தார்.

அரசு தரப்பின் இரு சாட்சியாளர்கள் அளித்த சாட்சியங்களும் குற்றம் சாட்டப்பட்டவர் உயிரிழந்தவரைக் கத்தியால் குத்தியதை நிரூபிக்கவில்லை என்றும் அவர் தமது தீர்ப்பில் கூறினார்.

எனவே, குற்றம் சாட்டப்பட்டவர் இவ்வழக்கிலிருந்து விடுவித்து விடுதலை செய்யப்படுவதாக அபு பகார் தெரிவித்தார்.

கட்டாய மரணத் தண்டனை விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)