பொது

288,000 ஊழியர் சேமநிதி வாரிய சந்தாதாரர்கள் அதிகமான பங்களிப்புகளைச் செலுத்தியுள்ளனர்

19/12/2024 05:07 PM

கோலாலம்பூர், 19 டிசம்பர் (பெர்னாமா) -- இவ்வாண்டு அக்டோபர் மாதம் வரையில் ஊழியர் சேமநிதி வாரியமான கே.டபள்யூ.எஸ்.பியைச் சேர்ந்த இரண்டு லட்சத்து 88,000 சந்தாதாரர்கள், 11 விழுக்காட்டு சட்டப்பூர்வ விகிதத்தைக் காட்டிலும் அதிகமான பங்களிப்புகளை வழங்குவதற்குப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் தேதி தொடங்கி ஆண்டுக்கு ஒரு லட்சம் ரிங்கிட் வரம்பிற்கு உட்பட்டு சந்தாதாரர்கள், எவ்வேளையிலும் தாங்களாகவே முன்வந்து அதில் கூடுதலாகப் பணத்தைச் சேமிக்கலாம் என்று நிதி துணை அமைச்சர் லிம் ஹுய் இங் தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி வரை சுமார் பத்து லட்சம் சந்தாதாரர்கள் தன்னார்வ முறையில் ஊழியர் சேமநிதி வாரியத்தில் ஆயிரத்து நூற்று 16 கோடி ரிங்கிட்டை செலுத்தியுள்ளனர்.

''சந்தாதாரர்கள் இந்த தன்னார்வ பங்களிப்புகளை எளிய செயலி, இணையம் மூலமாக பணம் செலுத்துதல், வங்கி நிறுவன முகவர்கள் மற்றும் கே.டபள்யூ.எஸ்.பி முகப்பு ஆகியவற்றின் மூலமாக எப்போது வேண்டுமானாலும் செலுத்தலாம், '' என்றார் அவர்.

சந்தாதாரர்களின் ஓய்வூதியப் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில் ஊழியர் சேமநிதி வாரியம் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து இன்று மேலவையில் ரோட்ரிக் வோங் சியூ லீட் எழுப்பிய கூடுதல் கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.

மேலும், I SARAAN திட்டத்தின் மூலம் தனிநபர் ஒருவருக்கு வாழ்நாள் முழுவதும் 5,000 ரிங்கிட் என்ற அதிகபட்ச வரம்பிற்கு உட்பட்டு ஆண்டிற்கு 500 ரிங்கிட் வரையிலான பங்களிப்பு பணத்தை ஊழியர் சேமநிதி வாரியம் வழங்கி வருவதையும் லிம் சுட்டிக்காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)