புத்ராஜெயா, 19 டிசம்பர் (பெர்னாமா) -- பெட்ரோனாஸ் கரிகாலி நிறுவனம் வழியாக குறிப்பாக எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் துர்க்மெனிஸ்தான் எப்போதும் மலேசிய தொழில்துறையை ஆதரித்து வருகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஆதரவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையை, மலேசியா மற்றும் துர்க்மெனிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மேற்கொள்வர் என்று தாம் நம்புவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
''இந்த ஒத்துழைப்புகள் வலுப்பெறுவதை நாங்கள் அறிந்திருக்கிறோம். மேலும் எங்கள் தொழில்களுக்கு, குறிப்பாக பெட்ரோனாசிலிருந்து பெறும் பொருட்கள் மீதான அவர்களின் விருப்பத்தையும் ஆதரவையும் நாங்கள் கண்டிருக்கிறோம். மேலும், மலேசிய அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக எனது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதுடன், இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை மற்றும் வெற்றியை உறுதி செய்வதற்கு இந்த ஒத்துழைப்பு மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று அதன் அதிபருக்கு உறுதியளிக்க வேண்டும், '' என்றார் அவர்.
இன்று புத்ராஜெயா, ஶ்ரீ பெர்டானாவில் துர்க்மெனிஸ்தான் அதிபர் செர்டார் பெர்டிமுஹமெடோவுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அன்வார் அவ்வாறு கூறினார்.
இதனிடையே, வளர்ச்சி, கலாச்சாரம் மற்றும் அனைத்துலக அமைதி ஆகியவற்றில் ஒட்டுமொத்த ஆர்வத்தை வெளிப்படுத்தும் அதேவேளையில், இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிப்பதற்கான பெர்டிமுஹமெடோவின் விருப்பம் குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)