கோலாலம்பூர், 19 டிசம்பர் (பெர்னாமா) -- 'வைஸ்' எனப்படும் மேற்கு ஈப்போ ஸ்பன் நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் வாகனமோட்டிகளிடம் வசூலிக்கப்படும் டோல் கட்டண விகிதம் கட்டுபாடின்றி வெறுமனே உயர்த்தப்படாது.
குத்தகை நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட சான்றளிக்கப்பட்ட தொழில்முறை ஆலோசகரின் வடிவமைப்பு மற்றும் பணி நோக்கத்தின் அடிப்படையில் அந்த
நெடுஞ்சாலை கட்டுமானத்திற்கான மதிப்பிடப்பட்ட செலவு அரசாங்கத்தால் இறுதி செய்யப்பட்டுள்ளதாக பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்ஸ்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
''நியாயமான செலவு மதிப்பீட்டை உறுதி செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் தற்போதைய விலை விகிதத்தை அடிப்படையாகக் கொண்டே, அரசாங்கத்திற்கும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கும் இடையிலான செலவு மதிப்பீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, கட்டுமானச் செலவுகள் அதிகரிப்பதை உள்ளடக்கிய பணியின் வரம்பில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி சம்பந்தப்பட்ட நிறுவனத்தால் அது முழுமையாக ஏற்கப்பட வேண்டும், '' என்றார் அவர்.
இன்று மேலவையின் கேள்வி நேரத்தின்போது செனட்டர் டத்தோ ஷம்சுடின் அப்துல் கஃபார் எழுப்பிய கேள்விக்கு அலெக்ஸ்சாண்டர் நந்தா லிங்கி அவ்வாறு பதிலளித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)