கோலாலம்பூர், 19 டிசம்பர் (பெர்னாமா) -- அரச குடும்பம் மற்றும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்மை அவமதித்து இழிவுப்படுத்தும் வகையில் கூற்று வெளியிட்டதாக நம்பப்படும் சமூக ஊடகத்தில் செல்வாக்குமிக்க பயனர் ஒருவரைப் போலீஸ் கைது செய்துள்ளது.
22 வயதான அவ்வாடவர், @ryanwong_5845 என்ற டிக்டாக் கணக்கின் வழியாக அந்த உள்ளடக்கத்தைப் பதிவேற்றம் செய்ததால் கடந்த செவ்வாய்க்கிழமை ஜோகூரில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசருதீன் ஹுசைன் கூறினார்.
1948-ஆம் ஆண்டு நிந்தனைச் சட்டம் செக்ஷன் 4 உட்பிரிவு 1 மற்றும் 1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் செக்ஷன் 233-இன் கீழ், தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதை, இன்று பெர்னாமா தொடர்பு கொண்ட போது டான் ஸ்ரீரசருதீன் உறுதிப்படுத்தினார்.
சமூக பாதுகாப்பு மற்றும் நாட்டின் நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதோடு, வெறுப்புணர்வை தூண்டும் வகையில், அரச குடும்பத்தை அவமதித்து இழிவுப்படுத்தும் நோக்கத்துடன் அக்கூற்றை வெளியிட்டதாக சம்பந்தப்பட்ட ஆடவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, கைது செய்யப்பட்ட அவ்வாடவர் தமது டிக்டாக் கணக்கின் மூலம் மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து, அவருக்கு எதிரான தடுப்பு காவல் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்ததாகவும் ரசருதீன் தெரிவித்தார்.
விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக அதன் விசாரணை அறிக்கை தேசிய சட்டத் துறையிடம் பரிசீலிக்கப்படும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)