பொது

17 குற்றச்சாட்டுகளிலிருந்து ரொஸ்மா விடுவித்து விடுதலை

19/12/2024 06:32 PM

கோலாலம்பூர், 19 டிசம்பர் (பெர்னாமா) -- 70 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான கள்ளப்பண பரிமாற்றம் தொடர்பிலான 12 குற்றச்சாட்டுகள் உட்பட உள்நாட்டு வருமான வரி வாரியம், எல்.எச்.டி.என்னிடம் வருமானத்தை அறிவிக்கத் தவறிய ஐந்து குற்றச்சாட்டுகளிலிருந்து டத்தின் செரி ரோஸ்மா மன்சோரைக் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று விடுவித்து விடுதலை செய்தது.

தம் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றது மற்றும் அக்குற்றச்சாட்டுகளில் குற்றத்திற்கான எவ்வித கூறுகளையும் அரசு தரப்பு முன்வைக்கவில்லை என்பதால் அவற்றை ரத்து செய்யும்படி, முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக்கின் துணைவியார் செய்த விண்ணப்பத்திற்கு அனுமதியளித்து நீதிபதி கே.முனியாண்டி அத்தீர்ப்பை வழங்கினார்.

அவற்றை ரத்துச் செய்யும்படி 2023ஆம் ஆண்டு செப்டம்பரில் ரொஸ்மா விண்ணப்பித்திருந்த வேளையில் அதே ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி அதன் விசாரணை தொடங்கியது.

இவ்வழக்கின் பெரும்பாலான விசாரணைகளில் இரு சாட்சிகளின் சாட்சியங்கள் செவிமடுக்கப்பட்டன.

கள்ளப்பண பரிமாற்றம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளில் ரொஸ்மா நேரடியாக ஈடுபட்டார் என்பதை அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கத் தவறியதாக நீதிபதி முனியாண்டியின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு, எவ்வகையான பரிவர்த்தனை அல்லது ரொஸ்மா எவ்வாறு நேரடியாக அவற்றில் ஈடுபட்டார் போன்ற விபரங்களும் அதில் நிரூபிக்கப்படவில்லை.

இதனிடையே, சரவாக் புறநகர் பகுதியில் உள்ள 369 பள்ளிகளின் சூரிய சக்தி திட்டம் தொடர்பிலான ஊழல் வழக்கில் அளிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 97 கோடி ரிங்கிட் அபராதத்தை செலுத்த வேண்டும் என்று விதிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக ரொஸ்மா மேல்முறையீடு செய்துள்ளார்.

அடுத்தாண்டு மார்ச் ஐந்தாம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அவ்வழக்கு விசாரிக்கப்படும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)