புத்ராஜெயா, 19 டிசம்பர் (பெர்னாமா) -- 1996ஆம் ஆண்டு கல்விச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும்.
ஆரம்பம் முதல் இடைநிலை வரையிலான கல்வியை அச்சட்டத் திருத்தம் கட்டாயமாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இச்சட்ட மசோதாவின் வரைவைத் தேசிய சட்டத்துறை அலுவலகமும் பரிசீலித்து விட்டதாக கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.
இச்சட்டத் திருத்தம், கல்வி முறை மற்றும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் மிகவும் முக்கியமானதாக அமையும் என்றும் ஃபட்லினா கூறினார்.
இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற கல்வியமைச்சின் மாதாந்திரக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அவ்வாறு கூறினார்.
மலேசியக் குடிமகனாக இருக்கும் ஒவ்வொருவரும் அவர்களின் பல்வேறு பின்னணிகளைப் பொருட்படுத்தாமல் தரமான கல்வியைப் பெறுவதை உறுதிசெய்யும் முயற்சியாக, ஆரம்ப நிலை முதல் இடைநிலை வரை கல்வியை கட்டாயமாக்குவதற்கான சட்ட மசோதா வரைவை பரிசீலித்து வருவதாக, கடந்த டிசம்பர் 4ஆம் தேதி தேசிய சட்டத்துறை அலுவலகம் ஏ.ஜி.சி தெரிவித்திருந்தது.
மற்றொரு நிலவரத்தில், செர்டாங்கில் உள்ள சமயப் பள்ளி ஒன்றில் மின்சாரம் தாக்கி இறந்ததாக நம்பப்படும் மாணவரின் குடும்பத்திற்கு ஃபட்லினா தமது இரங்கலைத் தெரிவித்து கொண்டார்.
கல்வி அமைச்சின் வளாகத்திற்கு வெளியே இச்சம்பவம் நிகழ்ந்திருந்தாலும், பள்ளியின் பாதுகாப்பு அம்சங்கள் எப்போதும் மேம்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
''நடந்த சம்பத்தை நாம் ஒரு பாடமாக எடுத்துக் கொள்வோம். கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளி வளாகங்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்ப்பதற்கு, பாதுகாப்பு பரிசோதனைகள் அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும், '' என்றார் அவர்.
நேற்று, 12 வயது சிறுவன் ஒருவன் வகுப்பில் மின்சாரம் தாக்கி சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ள வேளையில் அது தற்போது திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)