உலகம்

சூறாவளி தாக்கத்தினால் உணவின்றி தவிக்கும் மயோத் தீவு மக்கள்

20/12/2024 02:41 PM

மயோத் தீவு, 20 டிசம்பர் (பெர்னாமா) - பிரான்ஸ் மயோத் தீவில் வீசிய சிடோ சூறாவளியினால் அங்கே வசிப்பவர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

சுத்தமான குடிநீர் மற்றும் போதிய உணவின்றி அத்தீவில் வசிக்கும் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.

அண்மையில் வீசிய சூறாவளியினால் சுமார் 31 பேர் உயிரிழந்ததுடன் 2,000-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரப்பூர்வமாக 31 பேர் மட்டுமே உயிரிழந்திருப்பதாக கூறப்பட்டாலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகமாக இருக்கலாம் என்று மக்கள் அஞ்சுகின்றனர்.

டன் கணக்கில் உணவு, மருத்துவ உதவி மற்றும் கூடுதல் மீட்புப் பணியாளர்கள் மயோத் தீவுக்கு அனுப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்தார்.

மேலும், கள மருத்துவமனைகளும் இன்று அமைக்கப்பட உள்ளதாக அவர் உறுதியளித்தார்.

வெள்ளிக்கிழமைக்குள் மின்சார துண்டிப்பு மற்றும் நீர் விநியோகம் 50 விழுக்காடு சரிசெய்யப்படும் என்று மெக்ரோன் கூறினார்.

80 டன் உதவி பொருள்களுடன் கடற்படை கப்பல் ஒன்று மயோத் தீவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பிரான்ஸ் இராணுவம் தெரிவித்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)