கோலாலம்பூர், 20 டிசம்பர் (பெர்னாமா) -- தொழில்நுட்ப வளர்ச்சியினூடே தற்போது நாட்டில் மெல்ல அறிமுகப்படுத்தப்பட்டு வரும் கலைகளில் ஓவியக் கலை புதிய வரலாறு படைத்து வருகிறது.
மனித உள்ளுணர்வை வசமாக்கும், நுணுக்கங்கள் நிறைந்த இந்த அற்புத கலையை வடிவமைக்க அதன் கலைஞர்கள் பல்வேறான நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர்.
அவ்வகையில், கண்ணையும் கருத்தையும் தன்பால் ஈர்க்கும் ஓவியங்களை வரைந்து, இணையத்தின் மூலம் அதனை மக்களுக்குக் கண்காட்சி வழியாக கொண்டு சேர்க்கும் ஓவியக் கலைஞர் தவரூபணி சுப்ரமணியத்தின் சிறப்பு நேர்காணல் கலை சங்கமம் அங்கத்தில் தொடர்ந்து இடம்பெறுகிறது.
படம் பார்த்து கதை சொல்வது போல பல்வேறு உணர்ச்சிகள், நினைவுகள், சமூகக் கருத்துகள் மற்றும் சொந்த கோட்பாடுகள் கொண்ட ஓவியங்களைத் தமது பாணியில் உணர்வுப்பூர்வமாக வரைந்து, அதனை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியில் கடந்த 10 ஆண்டுகளாக தவரூபணி சுப்ரமணியம் ஈடுபட்டு வருகிறார்.
இந்த 10 ஆண்டுகளில் மலேசியா மட்டுமின்றி லண்டன், பாரிஸ், பெல்ஜியம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தாம் வரைந்த ஓவியங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்நிலையில், தற்போது இணையத்தின் வழி 'Butterflying The Highway' என்ற தலைப்பில் ஓவியங்களைக் கொண்டு கதை சொல்லும் ஒரு புதிய முயற்சியை தவரூபணி முன்னெடுத்துள்ளார்.
''தற்போது புதிதாக, இந்த வாரம்தான் வெளியீடு செய்தேன், இணையத்தின் வழியான ஒரு கண்காட்சி. மலேசியாவில் இதை செய்திருக்கின்றனர். நான் இதில் பொதுவாக சில தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியிருக்கிறேன். எழுத்து, ஓவியம் மற்றும் சில காணொளிகள். ஆக, மிகவும் கடினமாக்காமல் எளிய முறையில் இணையத்தின் வழி எவ்வாறு கதை சொல்வது'', என்று அவர் கூறினார்.
மேலும், பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையிலும் ஓவியங்களை வரைந்து வரும் அவர், அதற்கான வரலாற்று பின்னனிகளை நன்கு அலசி ஆராய்ந்த பிறகே அதில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.
அதோடு, கடந்த பத்து ஆண்டுகளில் இத்துறையில் தாம் எதிர்கொண்ட சவால்கள் குறித்தும் தவரூபணி இவ்வாறு பகிர்ந்து கொண்டார்.
''இந்த தொழிலில் ஒரு கட்டமைப்பு இருக்காது. அந்த கட்டமைப்பு மற்றும் ஒழுக்கம் ஒரு கலைஞனுக்கு மிகவும் முக்கியம். ஆக, நாம் தன்முனைப்பாக இருக்க வேண்டும், ஆர்வத்துடன் இருக்க வேண்டும். அதுமட்டும் போதாது. ஏறக்குறைய ஒரு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு அது நீடிக்கும். ஆனால், அதற்கு பிறகு, மனமுடைந்து போகும், உணர்வு ரீதியான சில சிக்கல்கள் ஏற்படும், உடல் ரீதியாகவும் சில பாதிப்புகள் ஏற்படும். அதை எப்படி கையாள்வது குறித்து நாம் இளமையாக இருக்கும்போது தெரியாது'', என்றார் அவர்.
அதை தவிர, மக்கள் மத்தியிலிருந்து கிடைக்கும் ஆதரவுகளும் போதுமானதாக இல்லாததால், அவர் இத்துறையில் தொடர்ந்து பயணிப்பதற்குப் பெரும் சவாலாக அமைந்தது என்றும் தவரூபணி தெரிவித்தார்.
இதனிடையே, ஓவியத் துறையில் சிறந்த எதிர்காலம் இருக்கின்ற போதிலும் அதில் கால்பதிக்க நினைக்கும் இன்றைய இளைய தலைமுறையினருக்கும் அவர் சில ஆலோசனைகளை வழங்கினார்.
''இளைஞர்களுக்கு நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால் அவர்கள் ஒரு ஓவியத்தை வரைந்து அவர்களே அவர்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். 'Use art as a tool to get know yourself' அது முக்கியம். அதற்கு பிறகு, முதலில் ஒரு பொழுதுபோக்காக செய்யுங்கள், ஆர்வமாக செய்யுங்கள், உங்களால் இதை தொடர முடியுமா என்று. ஒருமுறை அல்ல இரண்டு முறை அல்ல மாறாக சில வருடங்களுக்கு இதை தொடருங்கள். அதன் பிறகு, இதை முழுநேர பணியாக மாற்ற சிந்தியுங்கள்'', என்று தவரூபணி வலியுறுத்தினார்.
எனவே, கதை வடிவில் தற்போது இணையத்தில் காட்சிப்படுத்தி வரும் அவர் வரைந்த ஓவியங்களைப் பார்க்க விரும்புவோர் திரையில் காணும் அகப்பக்கத்தில் சென்று காணலாம் என்று, இன்று பெர்னாமாவிற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் போது தவரூபணி கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)